Wednesday, June 15, 2011

இயக்குநர் சங்கத் தேர்தல் ஒரே அணியில் பாரதிராஜா, அமீர்

சென்னை,ஜூன்.10: இயக்குநர் சங்கத் தேர்தலில், ஒரே அணியின் சார்பில் பாரதிராஜாவும், அமீரும் போட்டியிடுகிறார்கள்.

இயக்குநர் சங்கத் தலைவராக இருந்த பாரதிராஜாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை யடுத்து, வரும் 19-ம் தேதி இயக்குநர் சங்கத்துக்கு தேர்தல் நடக்கிறது.

தலைவராக இருந்து வரும் பாரதிராஜாவை எதிர்த்து, அமீர் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன் அமீர் தலைவராக கொண்டு இயக்குநர்கள் சேரன், ஜனநாதன் உள்ளிட்டவர்கள் அடங்கிய அணி மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், பாரதிராஜாவின் தலைமையில் அமீர் உள்ளிட்டவர்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா தலைவர் பதவிக்கும், அமீர் செயலாளர் பதவிக்கும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணியும், அமீரும் தனித்தனியாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment