’பூவனம்’ திரைப்படத் தயாரிப்பாளர் சுப்பையாவுக்கு துபாய் நாட்டில் உள்ள ‘ஈரோப்பியன் கான்டினென்டல் பல்கலைக் கழகம்’ டாக்டர் பட்டம் வழங்
படவுலகில் படத் தயாரிப்பாளராக, நடிகராக இப்போது காலடி எடுத்து வைத்திருப்பவர் என். சுப்பையா. இவர் ‘பூவனம்’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர, வேறு இரண்டு புதிய படங்களையும் இவர் தயாரிக்கிறார். அவற்றில் ஒரு படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னொரு படம் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இரண்டு படங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘பூவனம்’ படத்தைத் தயாரிக்கும் சுப்பையா அதில் படம் முழுக்க எஸ்டேட் உரிமையாளராக வருகிறார். தான் தயாரிக்கும் மற்ற படங்களிலும் இவர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார். ‘மதுரை மீனாட்சி என்.சி.எஸ். பிரசென்ட்ஸ்’ என்பது இவரின் பட நிறுவனத்தின் பெயர்.
அடிப்படையில் இவர் ஒரு விவசாயி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்காவில் உள்ள வாலாந்தூர் இவரின் சொந்த ஊர். இவரின் தாத்தா முத்துச்சாமி தேவர், தந்தை நல்லிவீரத் தேவர், தாயார் சின்னம்மா அனைவரும் விவசாயிகள். தன் தாத்தா, தந்தை வழியில் தீவிரமான விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சுப்பையா தன்னை ‘வாலாந்தூர் உழவன் மகன்’ என்று பெருமையாக கூறிக் கொள்கிறார். அங்கு இவர் நெல், கரும்பு, வாழை, பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.
‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ‘ராஜகுமாரி’ என்ற கிராமத்திலும் நிலம் இருக்கிறது. அங்கு ஏலம், மிளகு, காபி, ஜாதிக்காய், வாழை ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.
இவை தவிர, பொதுப் பணித் துறையின் கான்ட்ராக்டராகவும் இவர் செயல்பட்டிருக்கிறார். சாலை, நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் இவர் பல வருடங்கள் கான்ட்ராக்ட் ஒப்பந்தம் எடுத்து தன் பங்களிப்பை நன்கு ஆற்றியிருக்கிறார்.
மதுரையில் இவருக்கு சொந்தத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்கிறது.
விவசாயம், தொழில் துறை, கலையுலகம் ஆகியவற்றில் ஆழமாக கால் பதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு துபாயில் உள்ள ‘ஈரோப்பியன் கான்டினென்டல் பல்கலைக் கழகம்’ (European Continental University) சமீபத்தில் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்திருக்கிறது. அதற்காக துபாயில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சுப்பையா டாக்டர் பட்டத்துடன் திரும்பி வந்திருக்கிறார்.
‘வாலாந்தூர் உழவன் மகன் சுப்பையா நல்லித் தேவர்’ என்ற பெயரில்தான் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
படத்துறையில் தயாரிப்பாளராக பவனி வந்து கொண்டிருக்கும் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் ஒரு விவசாயிக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பது என்பது அனைவரும் சந்தோஷப்படக் கூடிய ஒரு விஷயம்தானே!