

சென்னை, அக்.9 (டிஎன்எஸ்) அதிமுக முன்னாள் எம்.பி.யும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன்(69) மாரடைப்பால் காலமானார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மன்னார்குடி சென்றிருந்தார். நிகழ்ச்சியில் பேசிய முடித்த பிறகு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்க்ப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.
சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக பிரபலமான் எஸ்.எஸ்.சந்திரன், அதிமுக-வில் இணைந்து 2001 முதல் 2007 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். தற்போது அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் கட்சி கூட்டங்களில் பேசி வந்தார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள இடும்பாவனத்தில் நேற்று (அக்.8) இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எஸ்.எஸ். சந்திரன் பங்கேற்று பேசினார். 9.05 மணிக்கு பேச துவங்கி 10.15 மணிக்கு முடித்தார். கூட்டம் முடிந்ததும் முத்துப்பேட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அமர்ந்து எஸ்.எஸ். சந்திரன் சாப்பிட்டார்.
பின்னர் மன்னார்குடியில் ஓட்டலில் தங்கினார். படுக்கைக்கு சென்ற அவருக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலிலும் அவதிப்பட்டார். சில வினாடிகளில் மயக்கமாகி சாய்ந்தார்.
உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
எஸ்.எஸ். சந்திரன் உட லுக்கு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் வேனில் ஏற்றப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டது.
மரணம் அடைந்த எஸ்.எஸ். சந்திரனுக்கு ராஜம் என்ற மனைவியும் ரோஹித், ரங்கராஜ் என்ற மகன்களும் கண்மணி என்ற மகளும் உள்ளனர். ரோஹித் சினிமா கம்பெனி வைத்துள்ளார். ரங்கராஜ் டாக்டருக்கு படிக்கிறார்.
எஸ்.எஸ். சந்திரன் 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். காமெடி குணசித்திர வேடங்களிலும், வில்லன் கேரக்டரில் நடித்து இருக்கிறார். ரஜினியுடன் மாப் பிள்ளை , உழைப்பாளி படங்களில் நடித்துள்ளார். பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் எஸ்.எஸ். சந்திரன் பாத்திரம் பேசப்பட்டது. ஒருமுறை சொல்லி விடு , எங்கள் குரல் ஆகிய படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது விஜய் டி.வி.யில் வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சியை டெல்லி கணேசுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.
சென்னை கொண்டு வரப்பட்ட எஸ் எஸ் சந்திரன் உடல், இன்று (அக்.9) காலை 10 மணிக்கு சாலி கிராமம் ராஜாஜி காலனி பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல். ஏ.க்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதிச்சடங்கு நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. சாலி கிராமத்தில் இருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தியாகராய நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. (டிஎன்எஸ்)
No comments:
Post a Comment