நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து கூடாது என்று எங்களது இயக்கம் தான் போராடி வருகிறது. போரின் போது இலங்கை போர்க் குற்றம் செய்து, தமிழர்களை கொன்று குவித்தது என்று உலக நாடுகளே குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்த நாட்டுக்கு இந்தியா ஏன் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும்?
தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு இந்தியா கப்பல் போக்குவரத்து மேற்கொள்வது தமிழர்களை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒரு பொருட்டாக கருதவில்லை என்றுதான் அர்த்தம்.
இலங்கை போரில் தமிழனை கொன்றால் இந்தியா பாயும் என்ற பயம் இருந்தால் அவர்கள் செய்வார்களா? அதற்கு காரணம் போரை நடத்தியதே காங்கிரஸ் அரசுதான்.
சமச்சீர் கல்வி என்பது பாடத்தை மட்டும் எல்லோருக்கும் சமமாக்கி பயன் இல்லை. அடிப்படை வசதி உள்ளிட்ட அனைத்திலும் சமமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. சமச்சீர் கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை, ஏற்கிறோம் என்று சொல்கிறது.
பாடம் தரமாக இல்லை என்றும், அதை தரப்படுத்தி செயல் படுத்துகிறோம் என்றுதான் கூறுகிறது. எனவே அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் சரியாக இருக்கிறது. இந்த அரசு எதையுமே சரியாகச் செய்ய வேண்டும் என்று கருதி செயல்படுகிறது.
இலவசங்களை அ.தி.மு.க. அரசு கொடுத்தாலும் சரி, காங்கிரஸ் அரசு கொடுத்தாலும் சரி, கம்யூனிஸ்டு அரசு கொடுத்தாலும் சரி, தி.மு.க. அரசு கொடுத்தாலும் சரி அது தேசத்தை நாசமாக்கும் திட்டமாகும். அதை நாங்கள் எதிர்க்கிறோம்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை ஒழிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலையில் நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி அறிவை பெற காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் பெருந்தலைவர் காமராஜரும் இறைவன்தான்.
தமிழகத்தில் 14 ஆயிரம் பள்ளிக் கூடங்களை அமைத்த காமராஜர், பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக, மதிய உணவு திட்டம், இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகம் வழங்கினார்.
அடுத்த தேர்தல் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி. அடுத்த தலைமுறை பற்றி சிந்தப்பவர் தான் தலைவராக முடியும். அப்படி அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் பெருந்தலைவர் காமராஜர்.
தமிழர்களின் அரசியல் வரலாற்றில் பெருந்தலைவர் காமராஜரை போன்ற தலைவரை தமிழர் இனம் இனி சந்திக்குமா? என்பது கேள்விக்குறி தான். ராமேஸ்வரத்தில் மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டால், அது மீனவர் மீது விழும் அடி என்று விட்டு விடாமல், அது தமிழ் தேசிய இனத்தின் மீது விழுந்த அடி என்று கருதி போராடினால் தான் வெற்றி பெற முடியும்.
தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களில் 8 லட்சம் பேர் இலங்கை தமிழர்களுக்காக போராடி இருந்தால் இலங்கையில் இந்த நிலை வந்து இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment