தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று 5 சென்டி மீட்டர் மழை பெய்தது. இது தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
நேற்று குமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பகுதி வலுபெற்று தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறி உள்ளது. இது திருவனந்தபுரத்துக்கு தெற்கே தென் கிழக்கில் 120 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும். நகரின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும். தென் கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்படும். இதன் காரணமாக தென் தமிழகம், லட்சத்தீவு, கேரள, கர்நாடக மாநில மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கைப்படுகிறார்கள்.
சென்னையில் தரை காற்று பலமாக வீசும். காற்றழுத்த மண்டலம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக மதுராந்தகத்தில் 19 செ.மீ. மழையும், விருத்தாசலத்தில் 17 செ.மீ, வேம்பனூர், மகா பலிபுரம் 16 செ.மீ, தொழுதூர் 15 செ.மீ., செங்கல்பட்டு, சேத்தியாத்தோப்பு 14 செ.மீ., மரக்காணம், ஒரத்தநாடு 13 செ.மீ. மழை பெய்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை சராசரி 43 செ.மீ. பதிவாகும். இந்த ஆண்டு நேற்று வரை 41 செ.மீ. மழை பெய்துள்ளது. எனவே சராசரியை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment