ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நிகழ்வு குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
சென்னை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அதில் பலியான சுவாதி என்கிற இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை நாம் தமிழர் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. அப்பாவிகளின் உயிரைக் காவு வாங்கும் இத்தகைய சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளைப்போல் சென்னையையும் பதட்டமாக்குகிற அளவுக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்குக்குச் சவால் விடும் நிகழ்வாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தேகத்தில் ஓட வேண்டிய ரத்தம் ஒருபோதும் தெருவில் ஓடக்கூடாது.
வன்முறையால் எத்தகைய சாதிப்பையும் நிகழ்த்த முடியாது. அப்பாவிகளைப் பலிவாங்கும் இத்தகைய கொடூரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கொண்டும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்துவிடாதபடி கண்காணிக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியான மாநிலமாகத் தமிழகம் எந்நாளும் தொடர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அதிகாரிகள் தக்கபடி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்
No comments:
Post a Comment