தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு என கருதப்படும் ஜல்லிக்கட்டு, மதுரை பகுதியில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மட்டும் அல்லாமல் தென் மாவட்டங்களில் தை பொங்கல் விழாவின்போது கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.
இதற்காக வீரர்களும், காளைகளும் போட்டி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். காளை வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் செலுத்தி ஆயிரக்கணக்கில் செலவு செய்து பராமரிப்பார்கள்.
இப்படிப்பட்ட விழா எப்போது வரும் என காளை அடக்கும் வீரர்கள் மட்டும் அல்ல பொதுமக்களும் ஆவலாக இருப்பார்கள்.
இந்த வீர விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டு வீரர்களும், காளை வளர்ப்போரும் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழர்களே அதிர்ச்சி அடைந்தனர். தடையை நீக்கி மீண்டும் விளையாட்டை தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
ஆனாலும் தடை நீக்கப்படாததால் இந்த ஆண்டு அலங்காநல்லூர் உள்பட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுகள் நடத்த முடியவில்லை. இதனால் பொதுமக்களும், இவ்விளையாட்டை ஆர்வமுடன் காண வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. காளை வளர்ப்பவர்களுக்கும் போட்டி நடத்தும் அமைப்பாளர்களுக்கும் இந்த தடை பெரும் இடியாக இருந்தது.
ஜல்லிக்கட்டுக்காக பராமரித்து வந்த காளைகளை தற்போது சரிவர பராமரிக்க முடியாமல் மாடு வளர்ப்போர் நொந்து போய் இருந்த நிலையில் அதை விற்க முடிவு செய்து வாடிப்பட்டி வார சந்தைக்கு கொண்டு சென்று விற்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த சந்தைக்கு கேரளா வியாபாரிகள் இறைச்சிக்காக மாடுகள் வாங்க வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு காளைகளும் இங்கு விற்கப்பட்டு வருவதால் இறைச்சிக்காக அந்த மாடுகளையும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
இதற்கு முன்பு ஒரு ஜல்லிக்கட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் அடிமாட்டு விலைக்கு ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என குறைந்த விலைக்கு விற்கப்படும் பரிதாப நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இது குறித்து மாடு வளர்க்கும் ஒருவர் கூறும்போது, செல்ல பிள்ளையை போல வளர்த்து வந்த எங்கள் காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை கோர்ட்டின் தடையால் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தமிழர்களின் வீர விளையாட்டையும், இறைச்சிக்காக விற்கப்படும் காளைகளை காப்பாற்றவும் தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த உத்தர விட வேண்டும் என்று கண் கலங்க கூறினார்.
No comments:
Post a Comment