Saturday, January 9, 2016

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

தமிழகத்தில் காளைகளைக் கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியும் கலாசார நிகழ்வுமான ஜல்லிக்கட்டை, சில நிபந்தனைகளுடன் நடத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வழியேற்பட்டுள்ளது.
 இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம், ஜனவரி 7-ஆம் தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
 "விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ், கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகிய விலங்குகளைக் காட்சிப்படுத்தவோ, பயிற்சி அளிக்கவோ, பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்து காளை தற்போது நீக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் "ஜல்லிக்கட்டு', மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப், ஹரியாணா, கேரளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காளைகளை வைத்து நடத்தப்படும் ரேக்ளா பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக பல்வேறு சமுதாயத்தினரால் அவரவர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு இப்போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பினர், மாநில விலங்குகள் நல வாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் கண்காணிப்பின்படி இந்தப் போட்டிகளை நடத்த வேண்டும். காளைகள் எவ்வித துன்புறுத்தலுக்கும் வலிகளுக்கும் ஆளாகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 போட்டியும் எதிர்ப்பும்: தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி (தற்போது மத்திய அமைச்சர்) உள்ளிட்ட விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் பங்கேற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
 இந்நிலையில், 2008-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஏதுவாக ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. பின்னர் 2011-இல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
 இந்நிலையில், காளைகள், சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில், காளையை மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம், கடந்த 2011-இல் புதிதாகச் சேர்த்து அரசாணை வெளியிட்டது. இதனால், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக விலங்குகள் நல வாரியமும், ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.
 மத்திய அரசுக்கு அழுத்தம்: இந்நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த
 2014}ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்ததும், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தில்லிக்கு பல முறை வந்து மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். அவர் மூலம் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த அழுத்தங்களின் தொடர்ச்சியாக மேற்கண்ட அரசாணையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
 
நான்கு நிபந்தனைகள்
 1. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டியை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
 2. காளைகள் பந்தயத்தை சரியான ஓடுபாதையில் நடத்த வேண்டும். இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு மிகாமல் அந்தப் பந்தயம் நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது, மைதானத்துக்குள் மாடு நுழைந்ததும் 15 மீட்டர் சுற்றளவுக்குள்ளாக மாடு பிடித்தலை நடத்த வேண்டும்.
 3. விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் காளைகளை, கால்நடைத் துறை அதிகாரிகள் மூலம் முறையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் ரீதியாக காளைகள் தகுதியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திய பிறகே, போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அந்த விலங்குகளுக்கு போதை ஏற்படுத்தும் எவ்வித ஊக்க மருந்தும் அளிக்கப்படக் கூடாது.
 4. விலங்குகள் வதை தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படி காளைகளின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
 
மேல்முறையீடு செய்வோம் - பீட்டா
 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விலங்குகள் நல ஆர்வலர் அமைப்பான "பீட்டா' முடிவு செய்துள்ளது.
 இது குறித்து அதன் சட்டப் பிரிவு அலுவலர் நிகுஞ்ச் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "விலங்குகள் உரிமைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது. காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டே நடத்த முடியாது. இதைக் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ள மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்' என்றார்.
 விலங்குகள் நல வாரியத் தலைவர் ஆர்.எம். கார்ப் கூறுகையில் "மத்திய அரசின் அரசாணை நகலை, வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி அவர்களின் கருத்துகளைப் பெற்று வருகிறோம். மேல்முறையீட்டுக்கான சட்ட நடைமுறைகளையும் ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.

No comments: