வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 144 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 90 தொகுதிகளில் தே.மு.தி.க.,வுக்கு 36 தொகுதிகள் உட்பட, 16 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்வதற்குரிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை அ.தி.மு.க., துவக்கியுள்ளது.
தொகுதி பங்கீடு எண்ணிக்கை முடிவுக்கு தே.மு.தி.க., தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது என்றாலும், தேர்தல் செலவு தொகை பேச்சுவார்த்தை முடிவு எட்டாமல் இருப்பதால், அக்கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவதில் இழுபறி நீடிக்கிறது.தி.மு.க., தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் உட்பட, சில கட்சிகள் ஒரு அணியாக போட்டியிடுகின்றன. அ.தி.மு.க., தலைமையில் ஏற்கனவே ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியில் புதிய வரவாக தே.மு.தி.க., இடம் பெறுமா என்ற கேள்வி அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை முன்னாள் அமைச்சர்கள் சிலர் ரகசியமாக நடத்தினர். அதில் அ.தி.மு.க., தரப்பில் 36 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதற்கு விருப்பம் தெரிவித்தன. இதற்கு தே.மு.தி.க., தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டாலும், தேர்தல் செலவுக்கான தொகையை ஒதுக்கீடு செய்வது குறித்த பேச்சுவார்த்தை இன்னும் முழுமை பெறவில்லை. இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெறுவதில் இழுபறி நீடிக்கிறது.
ம.தி.மு.க.,வுக்கு 15 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கு அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு கள்ளர், மறவர், அகமுடையார் என்ற அடிப்படையில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.கிருஷ்ணசாமி தலைமையில் உள்ள புதிய தமிழகம் கட்சிக்கு மூன்று தொகுதிகள், செ.கு.தமிழரசன் தலைமையில் உள்ள இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு தொகுதி, நடிகர் கார்த்திக் தலைமையில் இயங்கும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும் ஒதுக்கப்படுகின்றன.
கொங்கு முன்னேற்ற பேரவைக்கு நான்கு தொகுதிகள், பச்சமுத்து தலைமையில் உள்ள இந்திய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆக மொத்தத்தில் அ.தி.மு.க.,வுடன் சேர்த்து அக்கூட்டணியில், 18 கட்சிகள் இடம் பெறவுள்ளன.இதில், தமிழக தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, அம்பேத்கர் மக்கள் கட்சி, கிறிஸ்துவ மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், தமிழ் மாநில முஸ்லிம் லீக், யாதவர் பேரவை, வன்னியர் கூட்டமைப்பு, தலித் மக்கள் முன்னணி, கிறிஸ்துவ மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய குடியரசு கட்சி, ராஜிவ் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அனைத்துக் கட்டடத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம், வன்னிய குல சத்திரிய நல அமைப்புகளின் மத்திய மையம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.,வை ஆதரிக்கும் கட்சிகளாக விளங்குகின்றன. இதில் உள்ள சில கட்சிகளுக்கும் தொகுதி பங்கீட்டில், "ஜாக்பாட்' அடிக்கவும் வாய்ப்புள்ளது என அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment