ஆச்சி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் சிறந்த நடிகை மனோரமா.
19 வயதில் தொடங்கிய இவரது திரையுலக வாழ்க்கை 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் கம்பீரமாகவே காட்சியளிக்கிறது. தமிழ் சினிமாவில் இவர் போடாத வேஷங்கள் இல்லை.
மேடை நாடகங்களில் நடித்து வந்த மனோரமாவை ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் கவியரசு கண்ணதாசன் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். அஞ்சலை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் இதுவரை 1200 படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ‘பேராண்டி’ படத்தில் நடித்து வரும் மனோரமா எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என தமிழ் சினிமா ஜாம்பவான்கள் மட்டுமின்றி இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகையாக கோலோச்சிய அவர் குணச்சித்திர வேடங்களிலும் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்று பல படங்களில் நிரூபித்துள்ளார். பல படங்களில் தாய் வேடமானாலும் சரி, அக்காள் அல்லது தங்கை வேடமானாலும் சரி. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் மனோரமா கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
சர்க்கரை நோயுடன் மூட்டு வலியும் சேர்ந்து அவரை வாட்ட தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். தற்போது 2 மூட்டுகளிலும் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக கோளாறு உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மனோரமா வீட்டிலேயே தங்கி இருந்து ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில்தான் நடிகர் மன்சூர்அலிகான் தனது மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மனோரமா வீட்டுக்கு சென்றார். அப்போது மனோரமாவின் நிலை குறித்து அவர் உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில் மனோரமா எப்படி இருக்கிறார் என்பதை அறிவதற்காக தி.நகர் போக் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றோம்.
பிரபல நடிகையின் வீடு என்ற எந்தவித பரபரப்பும் இல்லாமலேயே மனோரமாவின் வீடு காட்சி அளித்தது. வீட்டுக்குள் சென்றதும் அவரது மகன் பூபதி அழைத்து சென்றார்.
சிறிது நேரத்தில் சினிமாவில் நாம் கம்பீரமாக பார்த்து பழக்கப்பட்ட மனோரமா கொஞ்சம் நடை தளர்ந்த நிலையில் கண்களில் நீர் மல்க வந்து அமர்ந்தார்.
நா தழுதழுத்த நிலையில் மனோரமா மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:–
சினிமாவுக்கு வந்து 50 ஆண்டை தாண்டி விட்டேன். சிங்கள படம் ஒன்றில்தான் முதலில் நடித்தேன். அந்த வசனம் என்ன என்பது எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. பேராண்டி என்ற புதுப்படத்திலும், இன்னொரு தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறேன்.
கடந்த சில மாதங்களாகவே வெளியில் எங்கும் செல்லாத நான் எஸ்.எஸ்.ஆர். இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்ததும் அவரது வீட்டுக்கு சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். நான் உடல் நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு போனிலும் நேரிலும் பலர் உடல் நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், சிவாஜியின் வீட்டுக்கு வரும் ரசிகர்கள் எனது வீட்டுக்கும் வந்து என்னை பார்த்து விட்டு செல்கிறார்கள்.
இது எனக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது. என்னை பார்க்க வரும் அனைத்து ரசிகர்களிடமும் சிறிது நேரம் பேசி விட்டுத்தான் நான் செல்கிறேன்.
திரையுலகைச் சேர்ந்த பலர் போனிலும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். கமல் பிறந்த நாள் அன்று போனில் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது அவர் தாயில்லாத குறையை நீங்கள்தான் நிவர்த்தி செய்கிறீர்கள் என்று கூறினார். பிறந்த நாள் வாழ்த்து கூறியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தற்போது படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறேன். இப்போது எனது பொழுது போக்கு டி.வி. பார்ப்பது மட்டும்தான். நான் பாடிய பாடல்கள், நடித்த காட்சிகள் ஆகியவற்றை பார்க்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது.
குறிப்பாக ‘‘மஞ்சள் குங்குமம்’’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சென்னையில் உள்ள கற்பகம் ஸ்டூடியோவில் வைத்து உடை மாற்றும் அறையில் புகுந்த பாம்பு ஒன்று என்னை கடித்து விட்டது. பின்னர் அந்த பாம்பை அடித்துக் கொன்றதும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதும் இப்போதும் என் மனதில் அப்படியே இருக்கிறது.
எனது மகன் பூபதி பின்னால் நடப்பதை முன் கூட்டியே கணித்து சொல்வான். அவன் பாம்பு கடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அம்மா உனது உடலில் விஷம் ஏறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறி இருந்தான். அவன் கூறியபடியே நடந்தது.
அதே போல ‘‘மாலையிட்ட மங்கை’’ படத்தில் சுடலை என்ற கதாபாத்திரத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் நடித்திருப்பார். அவர் ஒரு காட்சியில் ‘துப்பாக்கியால் உன்ன சுடல’ என்று வசனம் பேசுவார். அஞ்சலை என்ற கேரக்டரில் நடித்த நான் ‘அதற்கு நான் அஞ்சல...’ என்று சொல்வேன். அந்த காட்சியும் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
சினிமாவில் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ள இந்த இடைவெளி தற்காலிகமானதுதான். உடல்நிலை தேறியதும் மீண்டும் பழைய வேகத்தில் சினிமாவில் நடிப்பேன். ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு நெகிழ வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மனோரமா பேட்டியளித்துக் கொண்டிருந்த போது அவரை பார்ப்பதற்காக தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரேவதி, தேன்மொழி ஆகிய 2 ரசிகைகள் அங்கு வந்தனர். அவர்கள் மனோரமாவை பார்த்து விட்டு சென்ற சிறிது நேரத்தில் மலேசியாவில் இருந்து வந்த ரசிகைகள் தீபா, லட்சுமி, ஆனந்தவல்லி, ரசிகர் கார்த்திக் ஆகியோர் மனோரமாவை சந்திக்க ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.
அவர்கள் அனைவரும் மனோரமாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டதுடன் மனோரமாவுடன் சேர்ந்து தங்கள் செல்போனில் போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.
ரசிகை தீபா கூறும்போது, ‘‘எனது தாய் எம்.ஜி.ஆர்., சிவாஜி, மனோரமா ஆகியோரின் தீவிர ரசிகை. இன்று மனோரமாவுடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோக்களை அவரிடம் சென்று காண்பித்தால் மிகவும் சந்தோஷப்படுவார். பழம் பெரும் நடிகையான அவரை சந்தித்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்’’ என்றார்.
தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரேவதி கூறும்போது, ‘‘மனோரமாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவர் ரசிகர்களிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கண்களில் இருந்து வரும் கண்ணீரே அதனை உணர்த்துகிறது’’ என்றார்.
பின்னர் மனோரமாவிடம் உங்களுக்கு எத்தனை வயதாகிறது என்று கேட்டோம். அதற்கு பலமாக சிரித்துக் கொண்டே என்ன... 16 வயது இருக்குமா? என்று எதிர்கேள்வி கேட்டார்.
இந்த உற்சாகமும், சிரிப்புமே ஆச்சி மனோரமாவை இன்னும் நீண்ட நாட்கள் வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment