மதுரையில் தேவர் ஜயந்தியை முன்னிட்டு விதியை மீறி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் உள்ளிட்ட 600 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
மதுரையில் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் மாலை அணிவித்தனர். பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 4 பிரிவாக பொதுக்கூட்டம் நடத்தினர். அதற்கு காவல்துறை முன் அனுமதியும் பெற்றிருந்தனர். ஆனால் பேரணியாகச் செல்லவோ, கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தவோ கூடாது என காவல்துறை நிபந்தனை விதித்திருந்தது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுக்கூட்டம் ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்றது.
பின்னர் மாலையில் பாலம் ஸ்டேசன் சாலையிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கோரிப்பாளையத்துக்கு வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவர்கள் ஜான்சிராணி பூங்கா நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். அவர்கள் வந்த வழியெங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜான்சிராணி பூங்காவில் கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடந்ததாகவும், இதனால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கியதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும், விதி மீறி பொதுக்கூட்டத்தை நடத்தியதாகவும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் உள்ளிட்ட 600 பேர் மீது தெற்குவாசல் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதில் 10 பெண்களும் அடங்குவர். தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர் மருதலட்சுமி அளித்த புகாரின் பேரில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment