Saturday, July 14, 2012

திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று தொடங்கியது: அமைச்சர் சிவபதி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்


திருச்சியில் இருந்து நெல்லைக்கு பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு புதிய ரெயில் சேவை தொடக்க விழா திருச்சி ஜங்சன் முதல் பிளாட்பாரத்தில் நடந்தது.
விழாவில் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, தலைமை தாங்கி பச்சை கொடி அசைத்து ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குமார் எம்.பி, சிவா எம்.பி, மேயர் ஜெயா, கோட்ட மேலாளர் மஞ்சுளா ரெங்கராஜன் ஆகியோரும் கொடியசைத்து ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர்.  
திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (22627)திருச்சி ஜங்சனில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும். திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மதியம் 1மணிக்கு நெல்லை ஜங்சனை சென்றடையும்.
மறு மார்க்கமாக நெல்லையில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ரெயில் (22628) புறப்படும். இரவு 8 மணிக்கு திருச்சி, ஜங்சனை வந்தடையும். பயணிகள் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.
இன்று முதல் நாளிலேயே ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.   திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி ரெயிலில் 1 ஏ.சி. சேர்கார், 6, 2ம் வகுப்பு பெட்டிகள், 6 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன.
திருச்சியில் இருந்து நெல்லைக்கு டிக்கெட் கட்டணம் ரூ.85 (முன்பதிவு ரூ.100) திண்டுக்கலுக்கு ரூ.41, மதுரைக்கு ரூ.56, கோவில்பட்டிக்கு ரூ.74, ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ.சி.சேர்கார் கட்டணம் ரூ.354 ஆகும்.புதிய ரெயில் சேவையை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்கள் மீது குறிப்பாக திருச்சி மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். அதனால்தான் மக்கள் பயன்பெறும் திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வையுங்கள் என்று எனக்கு உத்தரவு வழங்கினார்.
மக்கள் பயனடையும் எந்த விஷயமானாலும் முன்னின்று செயல்படுத்துவதில் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு முன்னோடி முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளார்.
இதனால்தான் தமிழ் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ‘விஷன் 2023’ என்ற தொலை நோக்கு திட்டத்தை அளித்து உள்ளார். இதற்காக ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளார்.
இதில் போக்குவரத்து துறையை மேம்படுத்த மட்டும் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். ரெயில்வே பணிக்கு 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். தமிழ்நாட்டில் எந்த முதலமைச்சரும் செய்யாத திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க பாடுபட்டு வருகிறார்.
ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை முதல் முதலாக வேட்பாளராக அறிவித்து இன்று அனைத்து கட்சிகளும் அவரை ஆதரிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளார். எதிர்காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியாவை ஆளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இவ்வாறு சிவபதி பேசினார். கூடுதல் கோட்ட மேலாளர் அப்துல் ரகுமான் நன்றி கூறினார். 

No comments: