Sunday, December 23, 2012

மதுரை: அனைத்து சமுதாயங்கள் சார்பில் தொடர் முழக்க போராட்ட


மதுரை: அனைத்து சமுதாயங்கள் சார்பில் தொடர் முழக்க போராட்டம்-ராமதாஸ் பேட்டி
டிச. 20-


தலித் அல்லாத அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று மதுரை சின்னசொக்கிகுளம் ஜே.சி. ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் பி.டி.அரசக்குமார் முன்னிலை வகித்தார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் என்.ஆர்.தனபாலன் (தமிழ்நாடு நாடார் பேரவை), நாகராஜன் (கொங்குநாடு முன்னேற்றக்கழகம்), எஸ்.ஆர்.தேவர் (தேசிய பார்வர்டு பிளாக்), கிருஷ்ணமூர்த்தி (பார்க்கவ குல முன்னேற்ற சங்கம்), செல்வராஜ் (மூவேந்தர் முன்னேற்றக்கழகம்), காமராஜ் (ரெட்டி நலச்சங்கம்), பொற்கை நடராஜன் (அகில பாரத விஸ்வ ஜன சக்தி), பாரூக் (முஸ்லிம் லீக்), ராஜமாணிக்கம் (முத்தரையர் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சமுத்துவ சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். ஜாதியின் பெயராலோ, மதத்தில் பெயராலோ, பாகுபாடு காட்டப்படுவதை எவரும் விரும்பவில்லை. தற்போது பல்வேறு தரப்புகளில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு இருக்கிறது. மனதளவில் கூட தீண்டாமையை எவரும் கடைபிடிக்கக்கூடாது என்பது தான் அனைத்து சமுதாய தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் விருப்பம் ஆகும். ஆனால் சில தலைவர்கள், தங்கள் சுயலாபத்திற்காகவும், பழி வாங்குவதற்காகவும், எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத்த தூண்டுகிறார்கள்.

வன்கொடுமைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதை பல்வேறு சம்பவங்கள் நிரூபித்து உள்ளன. நீதி மன்றங்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளன. எனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்யவேண்டும். இந்த சட்டம், தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். நாகரிக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ, கலப்பு திருமணங்களுக்கோ தடைபோடுவது சரியாக இருக்காது.

இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. காதல் என்ற பெயரில் நடக்கும் நாடகங்களைத்தான் கண்டிக்கிறோம். காதல் நாடகங்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள், உற்சாகபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை தவறாக நடத்துபவர்கள் ஒரே கட்சியினர் தான். திருமாவளவன் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் கிடையாது. இந்த காதல் திருமணங்களால் ஏமாற்றப்படும் இளம்பெண்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே இதனை தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். காதல் நாடகங்கள் பற்றி இளம்பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளம்பெண்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வலியுறுத்தி அனைத்து சமுதாயங்கள் சார்பில் ஜனவரி 24-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தலித் அல்லாத அனைத்து சமுதாய தலைவர்களும் உடன் இருந்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments: