Tuesday, December 25, 2012

தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி டி.டி.எச்.சில் 'விஸ்வரூபம்': கமலஹாசன் உறுதி

‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்ப கமலஹாசன் உறுதியாக இருக்கிறார். தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி டி.டி.எச்.சில் இப்படம் வருகிறது. இதற்கான விளம்பரங்கள் டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

‘விஸ்வரூபம்’ படத்தை கமல் மெகா பட்ஜெட்டில் தயாரித்து உள்ளார். ரூ.95 கோடிவரை செலவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கமலே நடித்து இயக்கியுள்ளார். அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந்தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஒருநாள் முன்னதாக 10-ந்தேதி இரவு 9 மணிக்கு டி.டி.எச். மூலம் டெலிவிஷனில் விஸ்வரூபம் ஒளிபரப்பாகிறது. இதற்காக ஒரு இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியில் இப்படத்தை பார்க்க ரூ.500 கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ வருவதை தடுக்க தியேட்டர் அதிபர்களும் விநியோகஸ்தர்களும் தீவிர முயற்சி எடுத்தனர். இரு சங்கத்தினரும் கூடி டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட மாட்டோம் என்றும் எச்சரித்தனர். ஆனால் கமல் அதை ஏற்கவில்லை. 

‘விஸ்வரூபம்’ எனது பொருள், என் இஷ்டப்படி வியாபாரம் செய்வேன் என்று கூறி விட்டாராம். டாடா ஸ்கை, வீடியோ கான், டிஸ். டி.வி., ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் விஸ்வரூபம் ஒளிபரப்பப்படுகிறது. சன் டைரக்ட் டி.டி.எச்.சில் ஒளிபரப்பவும் பேச்சு வார்த்தை நடக்கிறது. 

கமல் முடிவுக்கு இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கேயார் போன்றோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தியேட்டர் அதிபர்கள் சிலரும் ‘விஸ்வரூபம்’ படத்தை தங்கள் தியேட்டர்களில் திரையிட விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் கமல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments: