இலங்கை போர்க் குற்ற ஆவணப் படத்தை இயக்கிய பிரிட்டனைச் சேர்ந்த கல்லம் மேக்ரே இந்தியா வருவதற்கு மத்திய அரசு "விசா' வழங்க மறுத்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு "விசா' மறுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில், வரும் 15 முதல் 17-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என்றும் அக்கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அக்கோரிக்கையை வற்புறுத்தி தமிழக சட்டப்பேரவையிலும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய படுகொலை காட்சிகள்: இந்நிலையில் 2009-ஆம் ஆண்டு இறுதி கட்டப் போரின்போது, விடுதலைப் புலிகள் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நடிகையாகவும் பணியாற்றிய இசைப் பிரியா (27) இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட காட்சிகளை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பும் இசைப்பிரியா உயிரிழந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை தற்போது வெளியிடப்பட்டுள்ள விடியோ காட்சிகள் தெளிவுபடுத்துவதாக உள்ளன.
இந்த விடியோ காட்சியை தில்லியில் வியாழக்கிழமை (அக்டோபர் 7) திரையிட சேனல் 4 தொலைக்காட்சி ஊடகக் குழுவினரும் போர் தொடர்பான ஆவணப்படத்தை இயக்கிய கல்லம் மேக்ரேவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தூதரகத்தில் விசா மறுப்பு: இதையடுத்து, இந்தியா வருவதற்கு "விசா' கேட்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் கல்லம் மேக்ரே விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அவரிடம் எவ்வித காரணத்தையும் குறிப்பிடாமல் "விசா' வழங்க இந்திய தூதரகம் மறுத்துவிட்டது. இந்நிலையில், தனியார் சமூக அமைப்பு மூலம் தில்லியில் விடியோ காட்சிகளை வெளியிட கல்லம் மேக்ரே திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
கல்லம் மேக்ரே கருத்து: விசா மறுக்கப்பட்டது குறித்து லண்டனில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கல்லம் மேக்ரே, "இந்தியா வர தொடர்ந்து எனக்கு விசா மறுக்கப்படுகிறது. இந்த செயலை ஏற்க முடியாது. இலங்கை அரசைத் திருப்திபடுத்துவதற்காக இந்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து இந்தியா வர விசா கேட்டு விண்ணப்பித்துக் கொண்டே இருப்பேன்' என்றார்.
வெளியுறவுத் துறை விளக்கம்: இதுகுறித்து வெளியுறவுத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வர விண்ணப்பித்த கல்லம் மேக்ரே, தில்லியில் சர்ச்சைக்குரிய விடியோ காட்சிகளை வெளியிட திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை பிரிட்டனில் உள்ள இந்திய தூதரே தீர்மானிக்க அதிகாரம் உள்ளது. அவரது நிலையிலேயே கல்லம் மேக்ரேவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் விசா கேட்டு விண்ணப்பித்தால் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இலங்கை போர் தொடர்புடைய விடியோ காட்சிகளை அந்நாட்டு அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த "சேனல் 4' தொலைக்காட்சி குழுவினர் போர் நடைபெற்றபோது சேகரித்த விடியா பதிவுகளை பல்வேறு ஆவணப் படங்களாகத் தொகுத்து தயாரித்துள்ளனர்.
அதன் மூலம், இலங்கையில் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டது உறுதியானது. அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு உலக நாடுகள் நெருக்குதல் கொடுக்க "சேனல் 4' தொலைக்காட்சி வெளியிட்டு வரும் விடியோ காட்சிகள் முக்கிய காரணமாக விளங்குகிறது.
அரசியல் கட்சிகள் கண்டனம்: ஏற்கெனவே, கடந்த ஆண்டு அக்டோபரில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் பொதுமக்களை நிர்வாண நிலையில் பின்புறமாகக் கைகளைக் கட்டி தலையில் துப்பாக்கியால் இலங்கை ராணுவத்தினர் சுட்ட காட்சிகளை "சேனல் 4' வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளை இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பாலச்சந்திரன் கொல்லப்பட்ட சம்பவத்தை, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கண்டித்துப் பேசினர். இந்நிலையில், விடுதலைப் புலிகள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப் பிரியா கொல்லப்பட்ட விடியோ காட்சியை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
.
No comments:
Post a Comment