லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் செழியன், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாலாவின் இயக்கத்தில் உருவான "பரதேசி' படத்தில் சிறப்பான பங்கை அளித்தமைக்காக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு மொழிப் படங்கள் கலந்து கொண்டன. இதில் திரையிடும் பிரிவு மற்றும் போட்டிப் பிரிவு என இரு பிரிவுகளாக திரைப்படங்கள் பங்கேற்றன.
இந்தியாவிலிருந்து லண்டன் திரைப்பட விழாவுக்கு தமிழில் உருவான "பரதேசி' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. உலகம் முழுவதிலிருந்தும் 10 சிறந்த படங்கள் போட்டிப் பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டது. அந்த பட்டியலில் "பரதேசி' படமும் இடம் பிடித்தது.
சிறந்த கதை, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 9 பிரிவுகளில், "பரதேசி' படம் நடுவர்களால் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதில் ஜூரிகளின் அதிகப்படியான வாக்குகளை பெற்று சிறந்த ஒளிப்பதிவாளராக செழியன், சிறந்த ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே தமிழில் உருவான "வெயில்', "வழக்கு எண் 18/9' ஆகிய படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடும் பிரிவுகளில் பங்கேற்றுள்ளன. ஆனால் போட்டிப் பிரிவில் பங்கேற்று விருதுகளை பெற்ற பெருமையை "பரதேசி' திரைப்படம் பெற்றுள்ளது.
.
No comments:
Post a Comment