Tuesday, October 28, 2014

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கதேவர் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 107–வது ஜெயந்தி விழாவும், 52– வது குருபூஜையும் பசும் பொன்னில் இன்று தொடங்கியது. 30–ந்தேதி வரை விழா நடக்கிறது. முதல் நாளான இன்று, தேவர் நினைவிடத்தில் ஆன்மீக விழா கொண்டாடப்பட்டது. நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாகபூஜையை நடத்தினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேவரின் ஆன்மீக சொற்பொழிவுகள் அங்கு நிகழ்த்தப்பட்டன. இதில் பலரும் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக தொண்டு குறித்து பேசினர். நினைவாலயம் முன்பு பெண்கள் இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தேவர் நற்பணி மன்றத்தினர், தேவர் பக்தர்கள் ஜோதி ஏந்தி வந்து நினைவாலயத்தில் ஏற்றினர். தொடர்ந்து பல்வேறு பிரமுகர்கள் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அகில இந்திய பார்வர்டு பிளாக் (ஆண்டித்தேவர் பிரிவு) சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துவேல், பொதுச்செயலாளர் ராஜேஸ்வரன், மாவட்ட தலைவர் ராமையா ஆகியோர் மாலை அணிவித்தனர். முக்குலத்தோர் சங்க மாவட்ட தலைவர் செல்லம், நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாதன் உள்பட பலர் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2–வது நாளான நாளை (புதன்கிழமை) தேவரின் அரசியல் விழா நடக்கிறது. இதில் அவரது அரசியல் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். 3–வது நாள் (30–ந்தேதி) தேவரின் குருபூஜை நடக்கிறது. அன்றைய தினம் தமிழக அரசு சார்பில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். இதேபோல் தி.மு.க., பாரதிய ஜனதா, ம.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் வருவோருக்கு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவின்பேரில் தேவர் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி பசும்பொன் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

No comments: