மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவு பற்றிய உண்மை விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வைகோ தலைமை தாங்கினார். மே.வங்காள மாநில மந்திரி பார்த்தா சாட்டர்ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:–
‘‘தமிழகத்திற்கும், மே.வங்காளத்துக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. இரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் உணர்ச்சி மிக்கவர்கள், வீரம் செரிந்தவர்கள். அடக்கு முறைக்கு எதிராக போராடியவர்கள். நேதாஜியின் மறைவு பற்றிய உண்மைகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய ராஜ்நாத் சிங் வெளியுறவு மந்திரி ஆனதும் அண்டை நாடுகளுடன் ஆன நட்புறவு பாதிக்கும். எனவே வெளியிட முடியாது என இப்போது கூறுகிறார்.
இதன் மூலம் அவர்களது உண்மையான முகம் வெளியே தெரிந்துவிட்டது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த 40 ஆயிரம் பேர் இடம் பெற்றிருந்தனர். அவர் விமான விபத்தில் சாகவில்லை. அவரது புகழ் உலகமெங்கும் பரவியதால் அப்புகழை அழிக்க திட்டமிட்டனர்.
அப்போது அவரது புகழ் பரவிவிடும் என்பதற்காகவே உண்மை ஆவணங்களை வெளியிட மறுக்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழர்களும், மே.வங்காள மாநிலத்தவர்களும் இணைந்து விரைவில் பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவோம். நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23–ந்தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மே.வங்கள மந்திரி பார்த்தா சாட்டர்ஜி பேசும் பேது, ‘‘நேதாஜி பற்றிய விவரங்களை மத்திய அரசு வெளியிடாதது வருத்தம் அளிக்கிறது. வளர்ச்சியை தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். அதை அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் மாசிலாமணி, ஜீவன், பாலவாக்கம் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment