Monday, November 2, 2015

மக்களுக்காக உண்மையாக உழைக்கும் பொய் வாக்குறுதிகளை தராத கட்சியுடன் தான் கூட்டணி சேருவேன் நடிகர் கார்த்திக் பேட்டி

மக்களுக்காக உண்மையாக உழைக்கும், பொய் வாக்குறுதிகளை தராத கட்சியுடன் தான் கூட்டணி சேருவேன் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.

ஆசை இல்லை

நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் நேற்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் சிவகாசிக்கு செல்ல 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. நான் என்ன அங்கு சென்று ஜாதி கலவரமா ஏற்படுத்த போகிறேன். சிவகாசியில் சீன பட்டாசு விற்பனைக்கும், அதனை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தான் வந்தேன். ஆனால் நான் அங்கு வந்தால் ஜாதி கலவரம் வரும் என்று நினைத்து, எனக்கு 144 தடை உத்தரவை விதித்துள்ளனர். எனவே சிவகாசிக்கு நான் போகமாட்டேன். சீனாவை கண்டால் இந்தியா பயப்படுகிறது. ஏன் என்றால் இந்தியாவை சுற்றிலும் சீனா ராணுவ தளத்தை வைத்துள்ளது. அதனால் தான் சீனாவிடம் இந்தியா பணிந்து போகும் நிலையில் உள்ளது.

என்னை ஒரு ஜாதி கட்சி தலைவராக நினைத்து வருகிறார்கள். நான் அப்படிபட்டவன் அல்ல. பார்வர்டு பிளாக் கட்சியில் நான் இருந்த போது அனைத்து ஜாதியினரையும் கட்சியில் சேர்க்கலாம் என்று கூறினேன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனிக்கட்சி தொடங்கினேன். நான் ஜாதி அரசியலை நடத்தவில்லை. மேலும் எனக்கு முதல்வராகும் ஆசை எல்லாம் இல்லை.

மணல் திருட்டு

தமிழகத்தில் இல்லாத பிரச்சினைகளே இல்லை. விலைவாசி உயர்வு, மதுக்கடை என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடமுடியாது. டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாரம் வந்து விடும். எனவே கள்ளச்சாராயத்தை தடுக்க முடிந்தால், டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்.

தாமிரபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. அதற்கான ஆதாரத்தை வைத்து தான் இங்கு பேசுகிறேன். நடிகர் சங்க தேர்தலில் நடிகை சச்சு, மன்சூர்அலிகான் போன்றவர்களுக்கு ஓட்டு போடும் உரிமை இல்லை என்று கூறியதை கேட்டு எனது மனம் மிகவும் துடித்தது. நடிகர் சங்கம் கடனில் இருக்கும் போது தான் நடிகர் விஜயகாந்த் தலைவர் ஆனார். அவர் அந்த சங்க கடனை அடைத்து, சுமார் ஒரு கோடி ரூபாயை வைப்பு நிதியாக வைத்து விட்டு சென்றார். அதன்பின்னர் சரத்குமார் வந்தார். எனக்கு நடிகர்கள் சங்கத்தில் எல்லோரும் நண்பர்கள் தான். ஆனால் சங்க இடத்தில் வேறு நபர்கள் பயன்படுத்த கூடாது என்பது எனது கருத்தாகும்.

கூட்டணி

நடிகை குஷ்பு எனக்கு சிறந்த நண்பர். ஆனால் நாங்கள் கட்சி தொடர்பாக இல்லாமல், எப்போதும் நண்பர்களாக மட்டுமே இருப்போம். தமிழகத்தில் யாரும் தனித்து ஆட்சி செய்ய முடியாது. கூட்டணி அமைத்து தான் ஆட்சி செய்ய முடியும். நான் கூட்டணி சேருவது என்றால் மக்களுக்கு உண்மையாக உழைக்கும், பொய் வாக்குறுதிகளை தராத கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி சேருவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

1 comment:

Anonymous said...

singam kilambiduchi

chinakaran pattasu thoziR saalaiyai muudivittu
veeru waattiRku odivittaan