சிங்கள ராணுவத்தினருடனான விடுதலைப்புலிகளின் போரின்போது காணாமல் போனதாக கூறப்பட்ட 80 தமிழர்களின் உடல்கள், மண்டை ஒடுகள் விடுதலைப்புலிகளின் கோட்டையாக கருதப்படும் மன்னார் அருகே புதைக்குழியை தோண்டிய போது கண்டெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டம் திருக்காதீஸ்வரம் பகுதியில் கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது கடந்த டிசம்பர் 21-ல் 4 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தடயவியல் மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் சில மாத இடைவெளிக்கு பின் நேற்று மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடங்கியபோது 80 தமிழர்களின் உடல்கள், மண்டை ஒடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்களும் இருந்தன. அவர்கள் எப்போது இறந்தார்கள் என்பதை கண்டறிய மேலும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் தலைவர்கள் இதுகுறித்து கூறுகையில் மன்னார் தமிழ் சமூகம் அதிகம் வாழும் பகுதி. இலங்கையுடனான போரின்போது ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இங்கு சண்டைகள் நடைபெற்றதாகவும், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள உடல்கள் அதில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
2008-க்கு முன்பு வரை இப்பகுதி இலங்கையின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் இந்த பகுதி 1988-89 ஆண்டைத் தவிர கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா வின் மனித உரிமை கவுன்சிலின் கூட்டத்தில் தலைவர் நவி பிள்ளை அறிக்கையில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்ட தடயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே இலங்கையில் கடந்த 2009-ல் நடந்த போருக்கு பின் கண்டெடுக்கப்பட்ட முதல் தடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment