Friday, February 28, 2014

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையை விஜய் தொலைக்காட்சி செய்ய வேண்டாம் – வைகோ


இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டனர். தாய்த் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழ்க் குலத்தின் பச்சிளங்குழந்தைகளும், தாய்மார்களும், வயது முதிர்ந்தோரும் கூட இராஜபக்சே இராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தப் பேரவலத்தால் முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தீக்குளித்து மாண்டனர். நடைபெற்ற இனக்கொலைக்கு நீதியை நாடி தமிழர்கள் எழுப்பும் ஆவேசக் குரலால் அனைத்துலகத்தின் மனசாட்சி விழித்துக் கொண்டுள்ளது. ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நியாயம் கிடைக்க தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் நீதிக்கான முழக்கம் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிங்கள இராஜபக்சே அரசு வஞ்சகமான வேலையைச் செய்கிறது. கொடியவன் கோத்தபய இராஜபக்சே கூட்டம் பின்னணியில் செய்திருக்கிற ஏற்பாட்டில் இலங்கையில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் மார்ச் 1-ஆம் தேதியும், 2-ஆம் தேதியும் உலக நாடுகளை ஏமாற்றும் வேலைக்கு ஏற்பாடாகி உள்ளது. ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள விஜய் தொலைக்காட்சியில் பாடல் இசைக்கும் கலைஞர்கள் இந்த இருநாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சி இசைக்குழுவினரும், இலங்கைக் கலைப்படைப்பினரும் இணைந்து இந்த இசைவிழாவை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1-ஆம் தேதி கொழும்பு மருதாணை, புனித வளனார் கல்லூரியிலும், மார்ச் 2-ஆம் தேதி பம்பலப்பட்டி கதிரேசன் மண்டபத்திலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஈழத்தில் ஏற்பட்ட தமிழினப் படுகொலையை நினைக்கும்போதே நமது மனம் வேதனையால் துடிக்கிறது. கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் மண்ணிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் ஒரு காணொளி வெளிவர இருக்கிறது. இந்நிலையில் கொழும்பில் சிங்களவன் நடத்தும் கேளிக்கைக் கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு இசைக் கலைஞர்களைப் பங்கேற்க வைப்பதன்மூலம் தாய்த் தமிழகத்தில் சிங்கள அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று வெளி உலகத்திற்குச் சொல்வதற்காகவே இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்ததுபோல விஜய் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்துதான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம். மார்ச் 1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் சிங்கள அரசின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியில் பாடுகின்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். உலகில் இசைக் கலையை முதலில் தந்தவர்களே தமிழர்கள்தான். இசைக்கலைஞர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறேன். எனவே, அவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கண்டிப்பாகப் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறேன். இந்த விபரீத வேளையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம் என தெரிவிப்பது எனது கடமையாகும். ‘தாயகம்’ வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க.

No comments: