ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது ஏன் என்பதற்கு தனது தீர்ப்பில் நீதிபதி குன்கா விளக்கம் அளித்துள்ளார்.
தீர்ப்பு முழு விவரம்
ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து குவித்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இதுதொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா அளித்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி உள்ளது. தீர்ப்பில் அவர் கூறி இருப்பதாவது:–
கடந்த 1991–ம் ஆண்டு முதல் 1996–ம் ஆண்டு வரையில், ஜெயலலிதாவின் வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சம் என்றும், செலவுத்தொகை ரூ.8 கோடியே 49 லட்சம் என்றும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
இந்த 5 வருடங்களில், ஜெயலலிதா தனது பெயரிலும், மற்ற 3 குற்றவாளிகள் பெயரிலும், தங்கள் நிறுவன பெயர்களிலும் ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு அசையா சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இந்த வருமானத்துக்கு ஜெயலலிதாவால் திருப்திகரமாக கணக்கு காட்ட முடியவில்லை.
ஜெயலலிதாவின் வருமானத்துக்கு பொருந்தாத வகையில், குற்றவாளிகள் 4 பேரும் சொத்துகளை குவிக்கும் நோக்கத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டு, ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு சொத்து சேர்த்திருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு உள்நோக்கத்துடன் உதவி செய்ததன் மூலம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றம் புரிய தூண்டுகோலாக இருந்து இருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
4 ஆண்டு ஜெயில்
எனவே, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, ஜெயலலிதாவுக்கு 6 மாத கால சாதாரண ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை அவர் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றச்சதியில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 6 மாதம் சாதாரண ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
குற்றவாளிகள் ஏற்கனவே அனுபவித்த சிறைவாச காலம், தண்டனையில் கழித்துக்கொள்ளப்படும்.
சொத்து பறிமுதல்
குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதி மற்றும் ரொக்க கையிருப்பை அபராத தொகைக்காக பிடித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
அதன்பிறகும் அபராத தொகையை ஈடுகட்ட முடியாவிட்டால், குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளை ரிசர்வ் வங்கிக்கோ, பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவோ விற்க வேண்டும். மீதி நகைகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.
ஜெயலலிதா சம்பந்தப்பட்ட 6 நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகளை மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கோடநாட்டில் உள்ள 900 ஏக்கர் நிலம், ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதர விவசாய நிலங்கள், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு அந்த நிலம் அமைந்துள்ள கிராமம் முழுவதையுமே ரூ.53½ கோடிக்கு வாங்கி விடலாம்.
இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பை நாமே கற்பனை செய்து கொள்ளலாம்.
வசூலிக்கப்படும் அபராத தொகையில், விசாரணை செலவுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும்.
கடும் தண்டனை ஏன்?
குவிக்கப்பட்ட சொத்துகளின் அளவை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த கடுமையான தண்டனை தேவைப்படுகிறது.
அதிகாரமும், சொத்து குவிப்பும் சேர்ந்த கலவைதான், இந்த வழக்கின் அடிப்படை. குறுகிய காலத்தில் ஜெயலலிதாவும், இதர குற்றவாளிகளும் சொத்துகளை குவித்து இருப்பது, சட்டவிரோத சொத்துகளை குவிப்பதற்கு ஆட்சி அதிகாரம் எப்படி பயன்படும் என்பதற்கு தெளிவான உதாரணம்.
இது, ஜனநாயக அமைப்புக்கு உண்மையான ஆபத்தாகும். இவர்கள் செய்த குற்றங்கள், அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு) பாதிக்கு மேல் வழங்கத்தக்கவை.
கடுமையான தண்டனை மூலம் ஊழலை ஒழிக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. அதன் நோக்கத்தை நிறைவேற்றுவது கோர்ட்டின் கடமை.
உயர் பதவியில் இருப்போர் செய்யும் ஊழல்கள், கீழ்நிலைகளில் இருப்போரையும் ஊழல் செய்ய தூண்டி விடுவதுடன், அவர்கள் மீது உயர் பதவியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி விடும்.
இவ்வாறு நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment