Wednesday, May 9, 2012

சினிமாவுக்கு எதிரானவன் : கருணாஸ்




லொடுக்குப் பாண்டியாக அறிமுகமாகி, திண்டுக்கல் சாரதியாக பரிணமித்து, அம்பாசமுத்திரம் அம்பானியான கருணாஸை நேரில் சந்தித்து அவரது சினிமா வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ளக் கிளம்பினோம்.




எந்த பந்தாவும் இல்லாமல், சாதாரணமாக நம்மை வரவேற்ற கருணாஸ், நாம் வந்த விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டார். அடுத்து என்ன ஆரம்பிக்கலாமே.. என்றார்..





உங்களது சினிமா பிரவேசம் எப்படி? பிறந்ததில் இருந்தே சினிமா கனவு கண்டவரா நீங்கள்?





உண்மையில் சொல்லப்போனால் எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். சினிமாவுக்கு எதிராக இயங்கிய பார்வேட் திங்கிங் ரைட்டர்ஸ் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அப்போதெல்லாம் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை, நமது வாழ்க்கை இப்படி சினிமாவோடு இணைந்து போகும் என்று.





திடீரென ஒரு நாள் பாலா சார் அலுவலகத்தின் வாட்ச்மேனிடம் நான் நையாண்டித் தனமாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, என்னை நந்தா படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டார் பாலா சார. அப்போது, சரி ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்றுதான் நடித்தேன். ஆனால், நந்தாவில் எனது லொடுக்குப் பாண்டி கதாபாத்திரம் பல ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், என்னையும் சினிமாவைக் கவர வைத்துவிட்டது.





சினிமா உங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்?





லொடுக்குப் பாண்டி படத்திற்கு பிறகு நிறைய படங்களில் வாய்ப்பு வந்தன. ஆனால் திடீரென புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தின் தோல்விக்கு என்னைக் காரணமாக்கியபோது நான் அதிர்ந்து போனேன். அப்போதுதான் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்தது. அதனை சவாலாக எடுத்துக் கொண்டு ஜெயித்தேன். எனது சொந்த நகைச்சுவைகளை எழுதி அதன் மூலம் நகைச்சுவையை வெளிப்படுத்த முயற்சித்தது அதில் இருந்துதான். எனவே ஒரு தோல்வியோ, சிக்கலோ நம்மை நாம் தெரிந்து கொள்ள வருவது தான் என்பதை புரிந்து கொண்டேன்.





திண்டுக்கல் சாரதி எப்படி உருவானது?





மக்கள் என்ன விரும்புகிறார்கள். எதை எதிர்பார்க்கிறார்கள், நான் எப்படி நடித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சிந்தித்ததில் உருவானதுதான் திண்டுக்கல் சாரதி. எனது கணிப்பு சரியாக இருந்தது. திண்டுக்கல் சாரதி பலராலும் பேசப்பட்டது. திண்டுக்கல் சாரதியில் என்னை கதாநாயகனாக ஏற்றுக் கொண்டதற்கு தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். தற்போது நான் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன்.





உங்களது வரவிருக்கும் படங்கள் பற்றி.





நான் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படங்களில் முழுவதும் காமெடியனாக இல்லாமல், டி. ராஜேந்தர், பாக்யராஜ், ராமராஜன், பாண்டியராஜன் போன்றவர்கள் எவ்வாறு கதாநாயகனுக்கான ஸ்டன்டடுகள் எடுக்காமல், கதைக்கான நாயகனாக நடித்தார்களோ அதுபோன்ற கதைகளில் நடிக்கிறேன்.





உங்களது முன்னோடியாக யாரை நினைக்கிறீர்கள்?





மலையாளம் நடிகர் ஸ்ரீனிவாசன் தான் எனது வழிகாட்டி. அவர், காமெடியனாகவும், கதாநாயகனாகவும் நடித்து இரு இடங்களையுமே சரியாக நிர்வகித்தவர். அவரையே என் வழிகாட்டியாக நினைக்கிறேன்.





அடுத்து 5 படங்களில் கதாநாயகனாகவும், 5 படங்களில் காமெடியனாகவும் நடிக்க திட்டமிட்டுள்ள கருணாசுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு அவரிடம் இருந்து விடைபெற்றோம்.



No comments: