மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துத் தொடர்ந்து போராடுவோம் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிஸ்வாஸ் (படம்) கூறினார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தீவிரப்படுத்தி வருகிறது. வங்கிகள் தனியார் மயமாக்கலை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
பொதுத் துறை நிறுவனங்கள் பிரதமருக்கோ, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கோ சொந்தமானதல்ல. மத்திய அரசின் இந்த கொள்கைகளை எதிர்த்து பார்வர்டு பிளாக் தொடர்ந்து போராடும்.
2014-ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸýக்கோ, எதிர்க்கட்சியான பாஜகவுக்கோ தனிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை. மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளோம்.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு இப்போது பதவிக்கு வந்துள்ள திரிணமூல் காங்கிரஸ் அரசின் நிலையை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. கோல்கத்தாவில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்படுகின்றனர். இத்தகைய நிலையை மாற்ற கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும்.
பார்வர்டு பிளாக் கட்சி மத்தியக் குழுவின் அறிவுரைப்படி, மக்களவை உறுப்பினர் பாசன் முகர்ஜி தலைமையிலான மூவர் குழு இலங்கை சென்று வந்துள்ளது.
அங்கு வாழும் தமிழர்களின் நிலை குறித்து மத்தியக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையுடன் பிரதமரை விரைவில் சந்திக்க உள்ளோம்.
அசாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வர்டு பிளாக் கட்சியின் மத்தியக் குழு விரைவில் பார்வையிட உள்ளது. அங்கு அமைதி நிலவ அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பார்வர்டு பிளாக் கட்சியின் 17-வது அகில இந்திய மாநாடு 2013-ம் ஆண்டு பிப்.24 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது என்றார்.
அப்போது மாநிலப் பொதுச் செயலர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
No comments:
Post a Comment