Friday, August 24, 2012

சிவகாசியில் இடித்த வீடுகளை மீண்டும் கட்டித்தர வேண்டும்: நடிகர் கார்த்திக் பேச்சு


சிவகாசியில் இடித்த வீடுகளை மீண்டும் கட்டித்தர வேண்டும்:
 நடிகர் கார்த்திக் பேச்சு
சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் ஏராளமான வீடுகள், கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. அந்த வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் கணேசன் என்பவர் தனது வீட்டு மொட்டை மாடியில் ஏறி நின்றுக்கொண்டு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். 

இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட கணேசன் குடும்பத்துக்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் நல்ல கண்ணு ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தனர். 

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு நடிகர் கார்த்திக் சிவகாசி வந்தார். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணேசனின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கார்த்திக் பேசியதாவது:- 

இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். 40 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை இங்கிருந்து அகற்ற நினைப்பது தவறு. இவர்கள் அனைவரும் உங்களுக்கு தான் ஓட்டு போட்டார்கள். அதனால் அவர்களுக்கு நீங்கள் தான் உதவ வேண்டும். எனக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது எப்போதும் ஒரு மதிப்பு உண்டு. இந்த சம்பவம் குறித்து அவருக்கு சரியான தகவல் கூறப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். 

என்னை விட சாது யாரும் இருக்க முடியாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் பொறுமையாக இருக்கிறேன். நான் பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை. அகிம்சை வழியில் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தொண்டர்களும் அகிம்சை வழியில் போராட வேண்டும். இங்கு இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் ரத்தம், சதையால் கட்டப்பட்டவை. ஆனால் அதிகாரிகள் சர்வ சாதாரணமாக இடித்து விட்டனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நான் மதிக்கிறேன். மாநில அரசு நினைத்து இருந்தால் இந்த வீடுகள் இடிக்கப்படாமல் தடுத்து இருக்கலாம். 

இந்த பகுதி மக்களுக்கு இடிக்கப்பட்ட வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும். நான் மக்களுடன் தான் இருப்பேன். அவர்களுக்காக நான் போராடுவேன். மக்களுக்காக எனது உயிர் போனால் நான் பாக்கிய சாலி. மக்கள் சக்தி மகத்தான சக்தி. நிச்சயம் அது வெற்றி பெறும். 

இவ்வாறு அவர் பேசினார்.

No comments: