Monday, June 20, 2011

இந்தியாவில் விரைவில் “புல்லட்” ரெயில் அறிமுகம்: மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்


பிரான்ஸ் நாட்டில் உள்ளது போன்று புல்லட் ரெயில் எனப்படும் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க இந்திய ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த ரெயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

பிரான்ஸ் நாட்டில் புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு மணிக்கு 280 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவிலும் புல்லட் ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு தேசிய அதிவிரைவு ரெயில்வே ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. அதிவிரைவு ரெயில் சேவையை இந்த ஆணையம் கண்காணிக்கும்.

புல்லட் ரெயில்களை இயக்க சில வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில் புல்லட் ரெயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ஆலோசனை வழங்க உலகளாவிய காண்டிராக்ட் விடப்பட இருக்கின்றன.

இதுபற்றி ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், புல்லட் ரெயில் திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யவும், உலகளாவிய காண்டிராக்ட் விடப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

பிரான்ஸ் நாட்டில் இயக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்துக்கு “டி.ஜி.வி.” என்று வெளியிடப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரெயில் திட்டத்துக்கு “டி.ஜி.எஸ்.” என்று பெயரிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கான பெயர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

புல்லட் ரெயிலை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 600 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் சென்று அடையும் வகையில் புல்லட் ரெயிலின் வேகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும். புதிய நகரங்களை உருவாக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது பெருமளவில் குறையும் என்றும் நம்பப்படுகிறது.

No comments: