Friday, June 24, 2011

அடுத்த மாதம் கேஸ்-டீசல் விலை உயர்கிறது: 'இலவச இணைப்பாக' பெட்ரோல் விலையும் உயர்கிறது!

டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை அடுத்த மாதம் உயர்த்தப்படவுள்ளது.

கடைசியாக இவற்றின் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி மத்திய அரசு உயர்த்தியது. சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ.35ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3ம் உயர்த்தப்பட்டது.

அடுத்ததடுத்து வந்த மாநில சட்டசபை தேர்தல்கள், விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த ஓராண்டாக டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. அதே நேரத்தில் பெட்ரோல் விலையை 10க்கும் அதிகமான முறை உயர்த்தியது.

ஆனால், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது.

இதனால் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் தினமும் ரூ. 450 கோடியை இழந்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மட்டுமே தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளதால், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை விஷயத்தில் மத்திய அரசின் முடிவையே எதிர்பார்த்துள்ளன.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரிகட்ட வேண்டுமானால் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.15.44ம், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.27.47ம், கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.381ம் உயர்த்த வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை உயர்ந்து விட்டதால், இனியும் இழப்பை தாங்க முடியாது என்று இந்த நிறுவனங்கள் கூறிவிட்டன. இதையடுத்து டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையை கடந்த மாதமே மத்திய அரசு உயர்த்த இருந்தது.

ஆனால் டீசல் விலையை உயர்த்தினால் லாரி ஸ்டிரைக் ஆரம்பிக்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயரும் என்பதாலும், பண வீக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் அதைச் செய்ய வேண்டாம் என மத்திய அரசு ஒத்திப் போட்டது.

கேஸ் விலையை உயர்த்தினால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் அதையும் ஒத்தி வைத்தது.

இந் நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களின் கடன் அளவு ரூ. 1.20 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இதனால் மத்திய அரசு மானியம் தந்தால் ஒழிய இந்த நிறுவனங்களை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், அவ்வளவு பணத்தைத் தர மத்திய அரசு தயாராக இல்லை, மத்திய அரசிடம் நிதியும் இல்லை.

இதே நிலை நீடித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதியையே இந்த நிறுவனங்கள் நிறுத்த வேண்டியதிருக்கும். கச்சா எண்ணை வரத்து தடைப்பட்டால், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு உருவாகும்.

இதை கடந்த வாரம் மத்திய அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுபடுத்தி விட்டன. முதல் கட்டமாக கேஸ் சப்ளையை நிறுத்தப் போவதாக இந்த நிறுவனங்கள் கூறிவிட்டன. கடந்த ஓராண்டாக நிலமையை சமாளித்து விட்ட மத்திய அரசு இனி இவற்றின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், பெட்ரோலியம் அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும், சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து அடுத்த மாதம் முதல் தேதி எரிபொருள் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் விலை உயர்வு குறித்து முடிவு செய்யப்படும். கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ.25 முதல் ரூ.50 வரையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.6 வரையும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதே நேரம் மண்ணெண்ணெய் விலை மிக மிகக் குறைவாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

இந்த விலை உயர்வை அமலாக்கும் அதே தினத்தில் இலவச இணைப்பாக பெட்ரோல் விலையையும் ரூ. 2 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதாவது ஒரே நேரத்தில் எல்லா வலியையும் கொடுத்தால் மக்களை ஏமாற்றிவிடலாமாம். டீசல் ஒரு நாள், பெட்ரோல் விலை ஒரு நாள் என்று ஏற்றினால் மக்களுக்கு அடிக்கடி கோபம் வருமாம்.

இதனால் இந்த 'சைக்காலஜி ட்ரீட்மெண்ட்டாம்'!. மக்களை 'மெண்டல் ஆக்காமல்' இருந்தால் சரி!!

No comments: