Monday, June 20, 2011

யாருக்கும் பயப்படமாட்டார்: ஜெயலலிதாவின் துணிச்சல் பாராட்டுக்குரியது; சத்யராஜ்-மணிவண்ணன் பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

இலங்கையில் ஈழத் தமிழர்களின் நலனை காக்கும் வகையில் தமிழக சட்ட மன்றத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கவும் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுப்பார். யாருக்கும் அவர் பயப்படமாட்டார். அவரது துணிச்சல் பாராட்டுக்குறியது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீராங்கனை வேலு நாச்சியார் போன்று வீரம் மிக்கவர் ஜெயலலிதா தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமானும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவும், சீமானும் இரட்டை குழல் துப்பாக்கிகள்.

மகாதேவி படத்தில் எம்.ஜி.ஆர். புலிக்கொடி ஏந்தி வருவார். இங்கும் புலிக் கொடி பட்டுடொளி வீசி வருகிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கப்பலில் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது ஆள் உயர அலை எழும்பி வரும். அலையால் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் மீது போய் விழுவார். அப்போது அவர் பொல்லாத அலை இது என்பார். ஆனால் எம்.ஜி.ஆரோ, நம்மை புரிந்து கொண்ட அலை என்று கூறுவார்.

இங்கு அலையென திரண்டு வந்திருக்கும் நீங்கள் எல்லாம் சீமானை புரிந்து கொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். தமிழ் ஈழம் மலர முதல்- அமைச்சர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.


டைரக்டர் மணிவண்ணன் பேசியதாவது:-

இலங்கை தமிழர்களுக்காக தமிழக சட்ட சபையில் நிறை வேற்றப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் வரவேற்கத்தக்கது. ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் தைரியத்துடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. தேர்தலின் போது எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நாம் தமிழர் கட்சி செயல்பட்டது.

சீமான் ஒருவர் மட்டும்தான் இலங்கை தமிழர் பிரச்சினைகளை பற்றி மட்டும் பேசினார். எனவே தமிழர்கள் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் உணவுக்கு வழியின்றி தவித்து வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் அங்கு கப்பலை இயக்குகிறது. இதில் ஏறி நாம் எப்படி பயணம் செய்ய முடியும்.

விடுதலைப்புலிகள் மட்டும் இன்று அங்கு இருந்திருந்தால் ஈழ தமிழர்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு மணிவண்ணன் பேசினார்.

No comments: