மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா; இவருடன், இளவரசியும் வந்துள்ளார். சசிகலாவின் வருகை, அ.தி.மு.க.,வுக்குள்ளும், அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, வீடு இடிப்பு வழக்கில் கைதான சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாகவும், ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும், சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன் உள்ளிட்ட, 20 பேரை, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி, கடந்த, டிசம்பர் 19ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, போயஸ் தோட்டத்திலிருந்தும் இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் மீது, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த, 28ம் தேதி, சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், 24 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தேன், டிசம்பர் மாதம் அவரைப் பிரிந்து, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது தான் உண்மைகளை முழுமையாகத் தெரிந்து கொண்டேன் எனக் கூறியிருந்தார்.மேலும், என்னுடைய உறவினர்களும், நண்பர்களும், ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் நான், வாழ்ந்து வந்ததை அடிப்படையாகக் கொண்டு, விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டனர். இதனால், கட்சிக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராகவும் சதித் திட்டங்களும் தீட்டியுள்ளனர். இதனால், மிகுந்த வேதனையடைந்தேன். என் உறவினர்களும், நண்பர்களும் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. ஜெயலலிதாவுக்கு தங்கையாக இருக்கவே விரும்புகிறேன். எனது, வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்துவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.இந்த அறிக்கையை, கடிதமாகவும் ஜெயலலிதாவுக்கு சசிகலா அனுப்பியிருந்தார். சசிகலா அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில், சசிகலா கணவர் நடராஜன் மற்றும் திவாகரன், தினகரன் உள்ளிட்ட, 19 பேர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடரும்; அதில் எந்த மாற்றமும் இல்லை என, கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.
சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எந்த நேரத்திலும் அவர் போயஸ் தோட்டத்துக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா நேரில் ஆஜரானதால் அவர் உடனடியாக போயஸ் தோட்டத்துக்கு திரும்பவில்லை. இந்நிலையில், இன்ற மாலை 4 மணியளவில், சசிகலாவும், இளவரசியும் போயஸ் தோட்டத்துக்கு திரும்பியுள்ளனர்.
No comments:
Post a Comment