மதுரை மாவட்டம், பெருங்காமநல்லூரில் கைரேகைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அமைச்சர், ஆட்சியர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
1920-ம் ஆண்டு மதுரை மாவட்டம், பெருங்காமநல்லூரில் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். இதில் ஆங்கிலேய அதிகாரிகளால் சுடப்பட்டதில் மாயக்காள் உள்ளிட்ட 17 பேர் வீரமரணம் அடைந்தனர்.
அவர்களது நினைவாக அங்கு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஆண்டுதோறும் நினைவு நாளன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை பெருங்காமநல்லூர் தியாகிகளின் 93-வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுக சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராமலிங்கம், மதுரை மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரைராஜ், மகேந்திரன் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.மூர்த்தி, லதா அதியமான், கோ. தளபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில், அதன் தலைவர் டாக்டர் என். சேதுராமன் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
அவருடன் கட்சியின் தலைமைக் கழகச் செயலர் குருசாமி, அகில இந்தியத் தேவர் பேரவை பொதுச்செயலர் கருப்பையா உள்ளிட்டோர் சென்றனர்.
பார்வர்டு பிளாக் சார்பில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் தலைமையில் ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினர்கள் என்.எஸ்.வி.சித்தன், மாணிக்கதாகூர், ஆரூண் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக சார்பில் தனபாண்டியனும், பாரதீய பார்வர்டு பிளாக் சார்பில் முருகன்ஜி உள்ளிட்டோரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் உ.சகாயம் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளான திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கானூரணி மற்றும் தேனி பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் சென்று நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். நினைவு தினத்தை முன்னிட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment