Tuesday, April 3, 2012

அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் வசதி

பல்வேறு தேர்வுகளுக்கு, ஆண்டாண்டு காலமாக விண்ணப்ப முறையை கடைப்பிடித்து வந்த தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது.

இம்முறையைத் துவக்கி வைத்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:டி.என்.பி.எஸ்.சி.,யில் தற்போது, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
*ஒரு முறை பதிவு செய்தால் போதும்; ஐந்து ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். பதிவு செய்யும் தேர்வர்களுக்கு, தனித்துவ அடையாள எண் மற்றும், "பாஸ்வேர்டு' தரப்படும். ஒரு முறை பதிவு செய்வது, குறிப்பிட்ட தேர்வுக்கு என, கருதப்பட மாட்டாது.
5 ஆண்டு பிரச்னையில்லை
*தேர்வர்களின் கல்வித் தகுதி அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்கு அறிவிக்கப்படும் எந்தத் தேர்வையும், தேர்வர்கள் எழுதலாம். ஒவ்வொரு முறையும், "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யத் தேவையில்லை. ஒரு முறை பதிவு செய்துவிட்டு, அதன்பின் மற்ற தேர்வுகளில் பங்கேற்கும்போது, தேர்வுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
* முதல் முறையாக பதிவு செய்யும்போது, அதற்கென 50 ரூபாய் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக, வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களில் பணம் செலுத்துவதற்கான சீட்டை பிரின்ட் எடுத்து, அதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள, 850 இந்தியன் வங்கி கிளைகள்; 500 அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம். மேலும், "நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு' மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

மாற்றமும் செய்யலாம்
*பதிவு செய்யும்போது, அதில், "இ-மெயில்' மற்றும் மொபைல்போன் எண்களையும் பதிய வேண்டும். அப்படிச் செய்தால், விண்ணப்பம் பதிவானதற்கான செய்தி, உடனடியாகத் தங்கள் மொபைல் போன் மற்றும் "இ-மெயில்' முகவரிக்கு வந்துவிடும். ஒரு முறை பதிவு செய்த பின், கல்வித் தகுதி உள்ளிட்ட சில மாற்றங்களைச் செய்ய விரும்பினாலும் செய்யலாம்.
*கிராமப்புற தேர்வர்களைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள, 215 தாலுகாக்களில், தாலுகாவுக்கு குறைந்தது இரண்டு மையம் வீதம், 500 உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள், இந்தியன் வங்கி கிளைகளிலோ அல்லது அஞ்சல் அலுவலகங்களிலோ தனியாக செயல்படும்.
*இந்த மையத்தில், "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்வதற்கான அத்தனை வசதிகளும், முழுமையாக இருக்கும். கம்ப்யூட்டர், இணையதள வசதியில்லாத தேர்வர்களுக்கு, இந்த உதவி மையங்கள் பெரிதும் பயன்படும்.இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.

ஒரு வாரத்தில் உதவி மையம் :தேர்வாணையச் செயலர் உதயசந்திரன் கூறியதாவது: விண்ணப்ப முறையில், 100 ரூபாய் செலவாகும். ஆனால், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 50 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்தினால் போதும். மேலும், ஐந்து ஆண்டுகள் வரை, தனித்தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.ஏற்கனவே, எந்தெந்த இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கினோமோ, அதே இடங்களில், இன்னும் ஒரு வாரத்தில், உதவி மையங்கள் அமைக்கப்படும். கூடுதலான இடங்களிலும், இந்த மையங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பேஸ்புக், டுவிட்டரிலும்...:டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளம், ஏராளமான கூடுதல் பகுதிகள் மற்றும் தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடராஜ் கூறியதாவது:
*புதிய இணையதளத்தில், 1930ம் ஆண்டில் இருந்து, தேர்வாணையத்தின் முந்தைய தலைவர்களின் புகைப் படங்கள், அவர்களைப் பற்றிய தகவல்கள்.
*தேர்வுகள் தொடர்பாக, தமிழக அரசு வழங்கிய அரசாணைகள்; முக்கிய தேர்வுகள் குறித்த வழக்குகளில், சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புகள்; மாதிரி கேள்வித்தாள்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
*அரசமைப்புச் சட்டம், விதிகள், பணியாளர் பகுதி மற்றும் விண்ணப்பதாரர் பகுதி என, பல்வேறு பகுதிகளைக் கொண்டுள்ளது.

தமிழில் இணையதளம்:
*விண்ணப்பதாரர்களுக்கான பகுதியில், நிரந்தரப் பதிவு; இணையவழி விண்ணப்பம்; அறிவிக்கைகள்; விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறை; ஆண்டுத் திட்டம்; பாடத் திட்டம்; விடைத்தாள் தொகுப்பு; தகுதி மதிப்பெண்; கவுன்சிலிங் விவரம்; இணையான கல்வித் தகுதிகள்; அரசின் முக்கிய அறிக்கை; கடிதம்; பல்கலைக் கழகங்களின் பட்டியல் ஆகியவை தரப்பட்டுள்ளன.
*தமிழ், ஆங்கிலம் என, இரு வழிகளிலும், இணையதளத்தைப் பார்க்கலாம்."தேர்வாணையம், பாராமுகமாக இருக்கிறது,' என, இனி கூற முடியாது. ஏனெனில், "பேஸ்புக்' மூலம், பொது மக்களும், தேர்வர்களும், எங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; "டுவிட்டர்' மூலம், எங்களுடன் கருத்துக்களை பரிமாறவும் செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

152 காலியிடங்கள்...:உதவி ஜியாலஜிஸ்ட், அரசு உதவி வழக்கறிஞர் உட்பட, 16 பதவிகளுக்கான 152 காலிப் பணியிடங்களுக்கு, "ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி. எஸ்.சி., அறிவித்து உள் ளது. இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, டி.என்.பி. எஸ்.சி., நேற்று வெளியிட்டது.www.tnpsc.tn.nic.in, www.tnpscexams.net ஆகிய இணையதளங்கள் மூலம், தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments: