Monday, April 23, 2012

புளியங்குடி அருகே விழா நடத்துவதில் பிரச்சினை: கோவிலில் குடியேறிய பொதுமக்கள் போராட்டம் வாபஸ்- டி.எஸ்.பி., தாசில்தார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ளது நெற்கட்டும் செவல் கிராமம். இங்கு ஊர் மக்களுக்கு பொதுவான உச்சினிமாகாளிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூக்குழி திருவிழா, ஆடிமாதம் பொங்கல் விழா நடைபெறும்.




இந்த திருவிழாவின் போது நெற்கட்டும்செவல் ஜமீன்தாரின் வாரிசுதாரர்களை மேளதாளத்துடன் கோவிலுக்கு அழைத்து வருவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் தனிநபருக்கு முதல் மரியாதை வழங்க கூடாது என அப்பகுதி மக்களின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜமீன்தார் தரப்பினர் வழக்கமான சம்பிரதாயங்களை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.



இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. தென்காசி ஆர்.டி.ஓ. ராஜகிருபாகரன் வழக்கமான முறைப்படி திருவிழாவை நடத்த உத்தரவிட்டார்.இதற்கு ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் காலை உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் குடியேறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் 200 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியிலேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்தையொட்டி அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்றிரவு புளியங்குடி டி.எஸ்.பி. ஜமீம், சிவகிரி தாசில்தார் கஸ்தூரி, புளியங்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகவேல் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



அப்போது பொதுமக்கள் இந்த ஆண்டு வழக்கம் போல் திருவிழா நடத்தி கொள்ளட்டும், அடுத்த ஆண்டு தனிநபருக்கு முதல் மரியாதை வழங்காமல் விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments: