Monday, June 10, 2013

அம்மாடியோவ்...! ரூ.642 கோடி: மன்மோகன் வெளிநாட்டு பயணச்செலவு

:"கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக, 642 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது' என, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின் கீழ், பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கான செலவு குறித்து கேட்கப்பட்ட தகவலுக்கு, பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில் தெரிவித்து உள்ளதாவது:பிரதமர், மன்மோகன் சிங், 2004ம் ஆண்டு முதல், 2013ம் ஆண்டு வரை, 67 நாடுகளுக்கு, அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், 63 பயணங்களுக்கான செலவுகள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அண்மையில் சென்ற, நான்கு பயணத்தின் செலவினங்கள் குறித்த விவரங்கள், இன்னும் கணக்கிடப்படவில்லை.அந்த வகையில், பிரதமரின் வெளி நாட்டுப் பயண விமான செலவிற்காக மட்டும், 642 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, 2012ல் மெக்சிகோ மற்றும் பிரேசிலில் நடைபெற்ற, "ஜி 20' மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, 27 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது.முன்னாள் ஜனாதிபதி, பிரதிபா பாட்டீல், தன் ஐந்தாண்டு பதவிக் காலத்தில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக, 223 கோடி ரூபாய் செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தலைவர்களின் பிறந்த தின, நினைவு தின விளம்பரங்களுக்காக ரூ.142 கோடி செலவு : மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜிவ் உட்பட, 15 முன்னாள் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு தின விளம்பரங்களுக்காக, கடந்த, 5 ஆண்டுகளில், மத்திய அரசு, 142 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.



இதுதொடர்பாக, மத்திய அரசின் விளம்பர பிரிவு இயக்குனரகம் வெளியிட்டுள்ள விவரம்:கடந்த, 2008-09 முதல், 2012-13 வரையிலான, ஐந்தாண்டுகளில், முன்னாள் தேசிய தலைவர்களின், பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களின் போது, பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காக, 142 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக மகாத்மா காந்தி பிறந்த தின மற்றும் நினைவு தின விளம்பரங்களுக்காக, 38.3 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.



இதற்கு அடுத்ததாக, ராஜிவ் பிறந்த தின, நினைவு தின விளம்பரங்களுக்காக, 25.4 கோடி ரூபாயும், அம்பேத்கருக்காக (17.9 கோடி), இந்திரா மற்றும் ஜவஹர்லால் நேரு தொடர்பான விளம்பரங்களுக்காக, 27.8 (16.9 + 10.9) கோடி ரூபாயும், சர்தார் வல்லபாய் படேல் (8.6 கோடி), பாபு ஜெகஜீவன் ராம் (6.2 கோடி), முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தொடர்பான விளம்பரங்களுக்காக, 3.0 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.இந்த விளம்பர பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில், அரசியல் சாராத நபர், சுவாமி விவேகானந்தர் மட்டுமே. சுவாமி விவேகானந்தர் தொடர்பான விளம்பரங்களுக்காக, 90 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மத்திய அரசின் விளம்பர பிரிவு தெரிவித்துள்ளது.





No comments: