Friday, June 14, 2013

கோடி சூர்யனில் ஒரு சூர்யன்

"கோடி சூர்யனில் ஒரு சூர்யன் அஸ்தமித்தான்; எரிதழல் கோளமாய் வானின்றிறங்கி மலைமடி வீழ்ந்தொரு சூர்யன் அஸ்தமித்தான்" எனப்பாடிய கவிஞர் தோழர் நவபாரதி, அஸ்தமிக்கும் சூர்யன் மீண்டும் எழுவான் என்பதையும் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின், உலக அமைதி நாடுவோரின் நெஞ்சங்களில் என்றும் நிலைகொண்டு ஓளி பாய்ச்சுவார் தோழர் பாலன். 'முரண்சுவை' என்னும் தலைப்பில் அற்புதமாக தினமணி கதிரில் எழுத்தோவியம் வரைந்துள்ளார் திரைக்கலைஞர், சிந்தனையாளர் திரு ராஜேஷ் அவர்கள்.
















சில காலம் பார்வார்ட் பிளாக் கட்சியில் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து செயலாற்றினார். இடைக்காலத்தில் திருச்சியில் தற்காலிகமாக முனிசிபல் சிப்பந்தியாகவும் வேலை செய்தார். பொன்மலையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த "தொழிலரசு' என்ற பத்திரிகையில் துணை ஆசிரியராக கல்யாணசுந்தரத்துடன் சேர்ந்து பணிபுரிந்தார்.​ ரயில்வே தொழிலாளர் இயக்கத்திலும் தொடர்பு கொண்டிருந்தார்.


- ராஜேஷ்



தமிழகத்தில் வாழ்ந்த பல கம்யூனிஸ்ட் தியாகிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கே.பாலதண்டாயுதம். அவரது ஊர் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள மாக்கினாப்பட்டி. அங்கு 1918-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 2-ம் தேதி பிறந்தார்.​ அவரது தந்தையின் பெயர் காளேஸ்வர முதலியார். ஊரில் பெரிய மனிதராக விளங்கினார்.​ பாலதண்டாயுதத்தை பாலன் என்று அன்புடன் அழைத்தார்கள். பெயர்தான் பாலன், அவரோ பெரிய அரசியல் மேதை.



நண்பர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் பணத்தையோ, உடையையோ,​​ வேறு எந்தப் பொருளையோகூட அவர் என்றுமே வாங்கிக் கொண்டதில்லை. ஒரு காலத்தில் படித்த இளைஞர்கள் மத்தியிலும், கம்யூனிஸ்டு அணிகள் மத்தியிலும், ஒரு ஹீரோவாகக் கொண்டாடப்பட்டவர் என்று இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் ஜெயகாந்தன்.





இரண்டாம் உலகப் போரை எதிர்த்துப் பேசிய பேச்சுக்காக 1940-ம் ஆண்டு தோழர் பாலனுக்கு 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1938 முதல் 1948 வரையான காலகட்டத்தில் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம்,​​ சுமார் 9 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். தாயை இழந்தார், மனைவியைப் பிரிந்தார், வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு ஆளானார்.



மேடையில் பேச ஆரம்பிக்கும் முன்பு, ""வீட்டை விட்டுப் புறப்படுகிறபோதே என் மனைவியிடம், வந்தால் வரவில் வை. வராவிட்டால் செலவில் வை என்று சொல்லி விட்டுத்தான் வந்திருக்கிறேன்'' என்று சொல்லுவார்.



நடுப்பகல் பசி நேரத்தில் பாலன் ஒரு மணி நேரம் பேசினால்கூட கைதட்டல் தவிர வேறு எந்த அசைவும் கூட்டத்தில் இருக்காது.



1945-ம் ஆண்டு பாலனை நெல்லையில் காவல்துறை கைது செய்ய நெருங்கும்பொழுது,​​ அவர் பேசிய வீர வசனம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அந்த வசனத்தின் பாதிப்பு 1950-களில் வெளிவந்த பல திரைப்படங்களில் இருந்தது. பல கதாநாயகர்கள் பாலன் பாணியில் பேசி புகழ் பெற்றார்கள்.



1948-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. பாலன் தலைமறைவானார்.​ அந்த சமயம் ஒருநாள் போலீஸ்காரர்கள் பாலனைத் தேடி அவர் மறைந்திருந்த வீட்டிற்குள் சென்றுவிட்டார்கள். அடைக்கலம் கொடுத்த அந்த வீட்டுக்காரம்மா உடனே விறகுக் கட்டைகளை எடுத்து பாலன் மேல் அடுக்கி வைத்து அவரை தப்பிக்க வைத்தார்.



தலைமறைவாக இருந்த காலத்தில் கோதுமைத் தவிடு மலிவாக இருந்தது. அந்தக் கோதுமைத் தவிட்டைப் பனை வெல்லத்துடன் சேர்ந்து தண்ணீர் விட்டுப் பிசைந்து சாப்பிட்டு வந்தார். இப்படி பாலன் பல நாட்கள் சாப்பிட்டதால் இவருக்கு வயிற்று வலியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டன. இப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பல பேர் மனநோய்க்கு ஆளானார்கள்.



தலைமறைவாக இருக்கும்போது,​​ இரவில் சந்தேகப்படும்படியான சத்தம் கேட்கும்போதெல்லாம் புகைக்கூண்டு வழியாக பாலன் தப்பித்துவிடுவார். தலைமறைவாக இருந்தபோது பாலனின் இரு கால்களிலும் எக்ஸிமா சிரங்கு இருந்தது. அதில் இருந்து ஒரே நீராக வடியும். அதை சாதாரணமாக தாங்கிக் கொள்வார்.​ தினசரி ஒரு புதுக் துணி வாங்கிக் கொண்டு வந்து, கால்கட்டு போடுவார்களாம் மக்கள்.



இரவில் நாய் குரைக்கும் சத்தத்தை வைத்து, பாலன் ""இந்த சத்தம் மற்ற நாய்களைப் பார்த்துக் குறைக்கிறது; ஆள் வரும் சத்தத்தை கேட்டு அல்ல'' என்று கூறக் கூடிய அளவுக்கு அவரை தலைமறைவு வாழ்க்கை தயார்படுத்தியிருந்தது.



சிறைக்குச் செல்லுமுன், அவருடைய மனைவியைத் திருச்சியில் முத்துராமலிங்கத் தேவரின் நண்பரான ரத்தினவேல் தேவர் பாதுகாப்பில் விட்டுவிட்டுச் சிறை சென்றார்.



ஒருமுறை சிறைச்சாலையில் நிகழவிருந்த ஒரு கலகத்திலிருந்து சிறை அதிகாரிகளையும், கைதிகளையும் காப்பாற்றினார். இதற்காக சிறை அதிகாரிகள் பாலனைப் பாராட்டினார்கள்.



1971-ல் நாடாளுமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் திறம்படச் செயல்பட்டார். அங்கிருந்த பல கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவரது திறமையைப் பாராட்டியுள்ளனர்.



பேரறிஞர் அண்ணாவையும், தி.மு.க.வையும் தர்க்கரீதியாகவும் அதே சமயம் எளிமையாகவும் பாலனை போல வேறுயாரும் தாக்கிப் பேசி இருக்க முடியாது.



தி.மு.க.வை ஆட்சியிலிருந்து இறக்கியே தீருவேன் என்று மனதிற்குள் சபதம் செய்து கொண்டு, அ.இ.அ.தி.மு.க. ஆரம்பித்த புதிதில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அரசியல் களத்தில் பணி புரிந்தார் பாலன். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததோ 1977-ம் ஆண்டு. ஆனால் 31.5.1973- அன்றே விமான விபத்தில் பாலதண்டாயுதம் பலியானார்.



மிக உயர்ந்த லட்சியத்துக்காகப் பாடுபட்ட பாலன் பூமியில் மரணமடையாமல் வானவீதியிலேயே பஞ்ச பூதங்களோடு கலந்துவிட்டார். உயிரோடு இருந்தபோது நாடு அவருக்கு ஒரு மரியாதையையும் செய்யவில்லை, இறுதி மரியாதை செய்யும் சிரமத்தையும்கூட அவர் நமக்குக் கொடுக்கவில்லை.



(நன்றி: தினமணி கதிர்)

No comments: