Tuesday, June 4, 2013

குவைத்தில் இந்தியர்களை வெளியேற்ற திட்டம்: தடுத்து நிறுத்த சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-




சவுதி அரேபிய அரசு நித்தாகாத் என்கிற ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்து அறிவிக்கப்படாத அவசர நிலையை உருவாக்கி அந்நாட்டில் பணியாற்றும் இந்தியர்களை சட்டத்திற்குப் புறம்பாக வெளியேற்றி வருகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



நேற்று முன்தினம் 300-க்கும் அதிகமான மக்கள் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு, இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான குவைத் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.



இப்பிரச்சினையில் தங்களால் எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் உதவிடமுடியும் என்று தெரியவில்லை என்றும், குவைத் அரசுத் துறையிடம் இதுபற்றி பேசுவதாகவும் இந்தியத் தூதர் உறுதியளித்துள்ளார்.



இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், பணியாளர்களின் குழந்தைகளை பள்ளிக்கு விடச்சென்ற பெண்களையும் சாலையிலேயே நிறுத்தி பிடித்து வானூர்தி நிலையத்திற்கு கொண்டு வந்து வெளியேற்றுகின்றனர். குவைத் அரசு மேற்கொள்ளும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அந்நாட்டுச் சட்டத்திற்கு முரணானவையாகும்.



நமது நாட்டின் பணியாளர்கள், எந்த அரபி அல்லது நிறுவனத்தின் விசா பெற்று அந்நாட்டிற்கு பணியாற்றச் சென்றனரோ, அவர்களிடமிருந்து உரிய இழப்பீட்டை அளித்து, உரிய கால அவகாசம் அளித்து திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே அங்கு பணியாற்றிவரும் இந்தியர்களின் கோரிக்கையாகும்.



நியாயமான இந்த கோரிக்கையை இந்திய அரசு, குவைத் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிறைவேற்றிட முடியும். குவைத்தில் வாழும் இந்தியர்களைக் காக்க உடனடியாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திட தமிழக முதல்வர் அழுத்தம் தரவேண்டும் என்பதே அங்கு சிக்கலில் உள்ள தமிழர்களின் கோரிக்கையாகும்.



இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments: