அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவன தலைவரான நடிகர் கார்த்திக் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நான் பிரசாரம் செய்து வருகிறேன். இதற்கிடையே கடந்த 29-ந் தேதி எங்கள் கட்சி வேட்பாளர்கள் 3 பேரை சென்னையில் இருந்து அ.தி.மு.க.வினர் காரில் கடத்தி வந்துள்ளனர். போட்டியில் இருந்து விலகி அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிக்கும்படி மிரட்டியுள்ளனர்.
உசிலம்பட்டி தொகுதியின் எங்கள் கட்சி வேட்பாளர் அதற்கு மறுத்த நிலையில் அவரை திண்டுக்கல் அருகே நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கும், போலீசாருக்கும் நான் புகார் கொடுத்துள்ளேன். அ.தி.மு.க. கூட்டணியை நம்பி நான் மோசம் போய்விட்டேன். அதனால் தனித்து போட்டியிட முடிவு செய்தோம்.
ஆனால் இப்போது எங்கள் கட்சி வேட்பாளர்களை பணம் கொடுத்து மிரட்டி தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளும்படி கூறுகிறார்கள். இதற்கிடையே எங்கள் கட்சியின் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளின் வேட்பாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிலர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டி வருகிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது இந்த தேர்தல் முறையாக நடக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. எங்கள் கட்சி இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எங்களை பிரசாரத்தில் ஈடுபடவும் முடியாமல் தடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே நான் அறிவித்த 27 வேட்பாளர்களில் தற்போது 18 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதற்கு அ.தி.மு.க.வின் மிரட்டல் தான் காரணம். அவர்களிடம் பணம் மற்றும் ஆள்பலம் உள்ளது. அதனால் இது போல செய்கிறார்கள். இந்த மிரட்டல் தொடர்பாக நான் சென்னை சென்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய உள்ளேன்.
அவர்கள் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் வேட்பாளர்களுடன் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன். எங்களுக்கு தி.மு.க. எதிரி அல்ல. அதனால் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
1 1
No comments:
Post a Comment