சாய்பாபா முன்பு பக்தர்களிடையே பேசும்போது, தான் சாய்பாபாவின் 2-வது அவதாரம் என்று குறிப்பிட்டு இருந்தார். ஷீரடி சாய்பாபா முதல் அவதாரம், தான் 2-வது அவதாரம், 3-வது அவதாரமாக ஒருவர் பிறப்பார். அவர் 36 வருடங்கள் மட்டுமே இருப்பார். அத்துடன் சாய்பாபா அவதாரம் முடிந்து விடும் என்று பேசி இருந்தார்.
சாய்பாபா பக்தர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 66 நாடுகளில் சாய்பாபா ஆசிரமம் உள்ளது. அங்கு அவரது பக்தர்கள் இலவச கல்வி அளித்து வருகிறார்கள். 136 நாடுகளில் சாய் சேவா சமிதி என்ற சமூக சேவை அமைப்பு செயல்படுகிறது.
சாய்பாபா பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டார். புட்டபர்த்தி ஆசிரமத்தில் பிரமாண்ட ஆஸ்பத்திரி கட்டி ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்.
சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க தெலுங்கு கங்கை திட்டத்தை ஆந்திரா-தமிழக அரசுகள் கொண்டு வந்தன. இதற்கு கால்வாய் அமைக்கும் பணிக்காக சாய்பாபா தனது டிரஸ்ட்டில் இருந்து ரூ.100 கோடி நிதி வழங்கினார்.
சாய்பாபா எப்போதும் தனது புட்டபர்த்தி ஆசிரமத்திலேயே இருப்பார். எந்த வெளிநாட்டுக்கும் சென்றது கிடையாது. கோடைகாலங்களில் மட்டும் கொடைக்கானலில் உள்ள சாய் ஸ்ருதி ஆசிரமத்தில் தங்குவார். பெங்களூர் ஒயிட் பீல்டில் உள்ள தாய் பிருந்தாவனத்தில் தங்குவதும் அவருக்கு பிடிக்கும்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் 750 கிராமங்களுக்கு சாய்பாபா குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதன் மூலம் 12 லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதே போல மராட்டியம், ஒரிசா மாநிலங்களிலும் குடிநீர் திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.
சாய்பாபா ஆசிரமம் மூலம் பல்கலைக்கழகமும், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 220 படுக்கை கொண்ட ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர பெங்களூரிலும் தனி மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு 333 படுக்கை அறை கொண்ட ஆஸ்பத்திரி செயல்படுகிறது.
சத்ய சாய்பாபாவை 1993-ம் ஆண்டு ஜூன்-6ந் தேதி கொல்ல முயற்சி நடந்தது. அவருடன் இருந்தவர்களே இந்த முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் சாய்பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து விபரீத செயலில் ஈடு பட முயன்றனர். அவர்கள் 6 பேரும் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்ய சாய்பாபாவுக்கு 38 வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு 3 தடவை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்துள்ளார். ஒரு தடவை மூளைக்கு செல்லும் ரத்தத்தில் தடை ஏற்பட்டு (ஸ்டிரோக்) அப்போதும் உயிர் பிழைத்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக 2005-ம் ஆண்டில் இருந்து சக்கர நாற்காலி பயன்படுத்தி வந்தார். 2006-ல் அவர் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment