Sunday, April 24, 2011

சரண் அடைந்த புலி தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; ஐ.நா. அறிக்கையில் தகவல்



கொழும்பு; இலங்கை இறுதிப்போரின் போது சரண் அடைந்த புலி தலைவர்களான நடேசன், புலித்தேவன். ரமேஷ் ஆகியோரை ராணுவம் சுட்டுக்கொன்றது என்ற அதர்ச்சி தகவல் ஐ.நா. அறிக்கையில் வெளியாகி உள்ளது.
போர் குற்றம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை திங்கள் கிழமையன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும் அதில் உள்ள தகவல்கள் கசிந்தவாறு இருக்கின்றன. கசியும்தகவல்களும் உண்மைதான் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதனிடையே இலங்கையில் இருந்து வெளிவரும் தி ஐஸ்லேண்ட் பத்திரிகை ஐ.நா. அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை அண்மையில வெளியிட்டுள்ளது.
அதில் இறுதி போர் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், புலிகளின் அமைதி செயலகத்தின் தலைவர் புலித்தேவன், மற்றும் ரமேஷ் ஆகியோர் சரண் அடைய முடிவு செய்தனர். ஆனால் இதற்கு புலிகளின் தலைவர் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் இறுதி கட்டத்தில் ராணுவம் அவர்களின் மறைவிடத்தை சுற்றி வளைத்து விட்டதால் சரண் அடைய தயாராயினர்.
தாங்கள் சரண் அடையும் முடிவை ஐ.நா. சபை மற்றும் நார்வே, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிடம் தெரிவித்தனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிடம் தங்கள் முடிவை கூறியுள்ளனர்.
இதே தகவல் மகிந்த ராஜபக்ஷே, கோத்தப்பய ராஜபக்ஷே ஆகியோரிடமும் புலிகள் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
ராஜபக்ஷே மற்றும் ராணுவ செயலாளர் கோத்தப்பய ராஜபக்ஷே ஆகியோரால் இதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புலிகளின் ஆதரவாளர்களிடம், புலிகள் சரண் அடையும் போது வெள்ளைக் கொடியை அசைத்து ராணுவத்தை நோக்கி குறிப்பிட்ட பாதையில் செல்ல வேண்டும் என்றும் அப்படி சென்றால் ராணுவம்தாக்குதல் நடத்தாது என்றும் பாசில் ராஜபக்சே அறிவுறுத்தியுள்ளார்.

புலிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சரண் அடையும் போது மூன்றாவது தலையீடு தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி காலை 6.30-க்கு நடேசன், புலித்தேவன், கர்னல் ரமேஷ் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், அப்பாவி மக்கள் என 300 பேர் சரண் அடைய வந்தனர்.
அதற்கு சில மணிநேரம் கழித்து பி.பி.சி., மற்றும் சில தொலை காட்சிகளில் நடேசன் உள்ளிட்டோர் போரில் கொல்லப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின.
அவர்களின் மரணம் குறித்து போர் களத்தில் கிடைத்த சிறிய தகவல்கள் அடிப்படையில் சரண் அடைந்த புலிகளின் தலைவர்களை ராணுவம் சுட்டுக்கொன்றிருப்பதாக ஐ.நா. குழு நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரண் அடைய வந்த தலைவர்களை சுட்டுக்கொல்லும் படி ராஜபக்சே உத்தரவிட்டதாக ஏற்கனவே சரத்பொன்சேகா தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: