நந்தனம் தேவர் சிலை சந்திப்பிலிருந்து செல்லும் பசும்பொன் முத்துராமலிங்கம் (தேவர்) சாலையின் பெயரை மாற்றக் கோரி இன்று (12.07.13) போராட்டம் நடத்திய தமிழர் எழுச்சி பேரவையினர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நந்தனம் தேவர் சிலை சந்திப்பிலிருந்து செல்லும் சாலை முன்பு சேமியர்ஸ் சாலை என்று இருந்தது. 1995-ல் நந்தனம் சந்திப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு முழு உருவ வெண்கல சிலையை அமைத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, சேமியர்ஸ் சாலையையும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார்.
ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், தெருக்களுக்கு சாதி அடைமொழியுடன் இருக்கும் பெயர்களை அகற்றினார். அதன்படி தேவர் சாலை, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை என மாற்றப்பட்டது. இதை எதிர்த்து தேவர் அமைப்புகள் குரல் எழுப்பியதால், சற்றே பின்வாங்கிய மாநகராட்சி நிர்வாகம் பசும்பொன் முத்துராமலிங்கம் (தேவர்) சாலை என அடைப்புக் குறிக்குள் தேவர் பெயரை போட்டு சமாளித்தது.
இப்போது இதை எதிர்த்தும் கிளம்பி இருக்கும் தமிழர் எழுச்சி பேரவையினர், 'தேவர்' பெயரை நீக்கக் கோரி போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இந்த அமைப்பின் தலைவர் வேலுமணி தலைமையில் சுமார் 25 பேர், பெயர் பலகை அழிப்பு போராட்டத்திற்காக இன்று காலையில் பெயின்ட் டப்பாவுடன் தேவர் சிலை அருகே கூடினார்கள். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், அத்தனை பேரையும் கைது செய்தார்கள்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தமிழக ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் நவமணி, ''தேவர் என்ற சொல் சாதி பெயர் அல்ல. அது சாதிக்கான ஒரு பட்டம் தான். தேவர் என்றைக்குமே ஒரு சாதிக்கு மட்டும் தலைவராக இருந்தவரில்லை. அவர் அனைத்து சாதியினரையும் நேசிப்பவராக இருந்தார். இதை புரிந்து கொள்ளாதவர்கள் நந்தனம் தேவர் சாலையின் பெயரை மாற்றக் கோரி போராட்டம் நடத்தி இருப்பது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. இதை ஃபார்வர்டு பிளாக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தோடு அவர்கள் தங்களது போராட்டங்களை நிறுத்திக் கொள்ளாவிடில், இதை கண்டித்து நாங்களும் போராட்டத்தில் குதிப்போம்'' என்றார்.
No comments:
Post a Comment