Tuesday, July 2, 2013

கடையநல்லூர் அருகே தேவர்சிலை அவமதிப்பு: பதட்டம்- போலீஸ் குவிப்பு

கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் பஸ் நிறுத்தம் அருகே தேவர்சிலை இருக்கிறது. இரும்பு கூண்டுபோட்டு பாதுகாக்கப்பட்டு வரும் இந்த சிலை மீது யாரோ மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு சாணம் வீசியுள்ளனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள தேவர் சங்க கட்டிடங்கள் மீது சாணம் வீசப்பட்டிருந்தது.




இதனை அப்பகுதி மக்கள் இன்றுகாலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



தகவலறிந்த தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இலத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவமதிப்பு செய்யப்பட்டிருந்த தேவர் சிலை உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது. மேலும் தென்காசி ஆர்.டி.ஓ.ரமேஷ், தாசில்தார் கோட்டூர்சாமி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினார்கள்.



இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவிவருவதால் பிரச்சினைகள் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

No comments: