Tuesday, July 30, 2013

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு முன்னர், அணு உலைகளுக்கு எதிராக அங்கு போராடிவரும் மக்கள் மீது தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடை முறைப்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடங்குளம் அணு உலைகள் தங்கள் வாழ்விற்கும், வாழ்வாதாரங்களுக்கும், எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதனாலேயே அதனை எதிர்த்து இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் அறவழியில் கடந்த 700 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அப்படிப்பட்ட மக்களின் மீது நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தது என்பது போன்ற மிகக்கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தாங்கள் எதற்காக போராடுகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் மீது மட்டுமின்றி, அங்கு வாழும் பள்ளிப் பிள்ளைகளின் மீதெல்லாம் வழக்கு போடப்பட்டுள்ளது. இவையாவும் அந்த மக்களை மிரட்டி பணிய வைக்கும் நோக்குடன் போடப்பட்டவை என்பதில் ஐயமேதுமில்லை. தங்களுடைய உரிமைக்காகவும், தங்கள் வாழ்வாதாரங்களை பாதுகாத்துக் கொள்ளவும் ஜன நாயக வழிகளில் போராட மக்களுக்கு சட்டரீதியான உரிமை உள்ளது. ஆனால் இப்படி அறவழியில் வன்முறை தவிர்த்து போராடும் மக்கள் மீது நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தார்கள் என்றெல்லாம் வழக்கு தொடர்வது, இந்திய ஜனநாயகத்தின் மீது நமது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தகர்த்து விடும். எனவே இதற்கு மேலும் தாமதிக்காது இடிந்த கரையில் போராடி வரும் மக்களின் மீது போடப்பட்ட வழக்குகளை முற்றிலுமாக திரும்பப் பெற தமிழக அரசு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: