புதுடில்லி: 'நீங்கள் நினைப்பதை விட, உலகத் தலைவர்கள் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்' என்ற தலைப்பில், உலகின் முன்னணி இணையதளங்களில் ஒன்றான, அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஹபிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தி:'இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், ஓமன் நாட்டின் சுல்தான், சிரியா அதிபர், அல் - அசாத் ஆகியோரை விட, சோனியா, அதிக சொத்துகளை குவித்துள்ளார்; அவரிடம், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன' என கூறப்பட்டுள்ளது.இதை, காங்., செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி மறுத்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி:
உலக நாடுகளின் தலைவர்கள், 20 பேரின், தனித்தனி சொத்து மதிப்பை வெளியிட்டுள்ள அந்த இணையதளம், அதன் அருகிலேயே, அந்த நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி யில், தனிநபர் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதை காட்டி உள்ளது.இந்தப் பட்டியலில், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரபு நாடுகளின் மன்னர்கள் தான், அதிக சொத்துகளை கொண்டு உள்ளனர்.பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின். இவருக்கு, 2.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் உள்ளன. இரண்டாவது இடத்தில், தாய்லாந்து மன்னர், பூமிபால் அதுல்யதேஜ் உள்ளார். அடுத்த இடத்தை, புருனே மன்னர், ஹசனல் போல்கியா பிடித்துள்ளார்.இப்படியே தொடர்ந்து, சவுதி அரேபியா மன்னர், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர், துபாய் மன்னர், வட கொரியா அதிபர் போன்றோர், அவரவர் சொத்து மதிப்பிற்கு ஏற்ப, தர வரிசையாக இடம் பெற்றுள்ளனர்.இந்தப் பட்டியலில், காங்கிரஸ் தலைவர், சோனியா, 12வது இடத்தில் உள்ளதாக, அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. அவருக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கீழ் உள்ள தலைவர்கள் பட்டியலில், மொனாக்கோ மன்னர், ஓமன் மன்னர், சிரியா அதிபர், அசர்பைஜான் அதிபர், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், குவைத் மன்னர் ஆகியோர் உள்ளனர்.'ஹபிங்டன் போஸ்ட்' இணையதள பத்திரிகையில், வெளியாகி உள்ள தகவல்கள் உண்மை தானா என்பதையும், எதன் அடிப்படையில் அந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன என்பதற்கான ஆதாரத்தையும், அந்த இணையதளம் தெரிவிக்கவில்லை.
வேட்புமனுவில் மாறுபாடு:'
சோனியாவின் சொத்து மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்' என, அந்த இணையதளம் தெரிவித்துள்ள நிலையில், 2009 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட, சோனியா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரின் சொத்து மதிப்பு, 1.38 கோடி ரூபாய் தான் என, அவர் கூறியுள்ளார்.இது, அவர் மகனும், காங்கிரஸ் துணைத் தலைவரும், அமேதி தொகுதி, எம்.பி.,யுமான ராகுலின் சொத்து மதிப்பை விட, 1 கோடி ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தன் கைவசம் உள்ள சொத்துகளாக, வேட்பு மனுவில் சோனியா குறிப்பிட்டு உள்ள சொத்துகள் பற்றிய விவரம்:கையில், 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளது. வங்கிகளில், 28 லட்சம் ரூபாய் இருப்பு உள்ளது. பரஸ்பர நிதித் திட்டங்களில், 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். ரிசர்வ் வங்கியில், 12 லட்சம் ரூபாய் முதலீடு உள்ளது. போஸ்ட் ஆபீசில், 2 லட்சம் ரூபாய், பி.பி.எப்., திட்டத்தில், 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்து உள்ளேன்.மொத்தம், 11 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.5 கிலோ தங்கம், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 88 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளன.இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு விவசாய நிலங்கள், இத்தாலியில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், மூதாதையர் வீடு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஹபிங்டன் போஸ்ட் இணையதளம்:
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இணையதளம், 2005ல் துவக்கப்பட்டது; நியூயார்க்கில், தலைமையகம் உள்ளது; உலகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர்.'அமெரிக்கா ஆன் - லைன்' என்ற, மிகப் பெரிய இணையதளத்தின், துணை நிறுவனமாக, இது கருதப்படுகிறது.இணையதளங்களின் தரவரிசை பட்டியலை நிர்வகிக்கும், 'அலெக்சா' நிறுவனம், இந்த இணையதளத்திற்கு, உலக அளவில், 68வது இடம் வழங்கியுள்ளது.ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலியன், ஜப்பான், ஜெர்மன் மொழிகளில் இது வெளி வருகிறது.மிகச் சிறந்த செய்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும், 'புலிட்சர்' விருது, கடந்த ஆண்டு இந்த இணையதளத்திற்கு கிடைத்து உள்ளது.
No comments:
Post a Comment