ஆரம்பத்தில் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்தக் கட்சியின் செயல்பாட்டால் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. அதிமுக திமுகவுக்கு மாற்றாக தேமுதிக இருக்க வாய்ப்பு இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு அசோக்நகரில் உள்ள இல்லத்தில் தினமணிக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
தேமுதிகவில் இருந்து விலகியது திடீர் முடிவு இல்லை. திட்டமிட்டு எடுத்த முடிவுதான். கடந்த ஞாயிற்றுக்கிழமையே (டிச.8) விலகல் முடிவை அறிவிக்க நினைத்திருந்தேன். தேர்தல் முடிவுகள் வெளியான நாள் என்பதால் அன்று அறிவிக்கவில்லை.
தேமுதிகவில் இருந்து விலகுவது தொடர்பாக விஜயகாந்த்திடம் நான் எதுவும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் விலக வேண்டாம் என்று அவர் நெருக்குதல் அளிப்பார். அதனால் சொல்லவில்லை. பதவியை ராஜிநாமா செய்த பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை.
தற்போது எனக்கு வயது 77. சிந்தனையின் செயல்பாடு சிறப்பாக இருந்தாலும், உடல் நலம் ஒத்துழைக்கவில்லை. மருத்துவரும் ஓய்வு எடுப்பது அவசியம் என்று அறிவுரைத்துள்ளார். அதன் காரணமாகவே ஓய்வை அறிவித்துள்ளேன்.
எனக்கு அடுத்து வயதில் மூத்தவராக கருணாநிதி உள்ளார். அவரால் உழைக்க முடிகிறது. வாழ்த்துகள்.
தேமுதிகவில் இருந்து விலகியதற்கு உடல் நலத்தைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை. எனக்கு அங்கு அவமரியாதை ஒன்றுமில்லை.
ஏற்காடு இடைத்தேர்தல், தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் கூறினேன்.
ஏற்காடு முடிவை ஏற்றனர். ஆனால் தில்லியில் போட்டியிடுவது என்று முடிவு எடுத்தனர். அப்படி ஏன் முடிவு எடுத்தனர் என்று தெரியவில்லை. ஒரு கருத்தைச் சொல்லலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் தலைவரின் முடிவுதான்.
தேமுதிகவில் இருந்து நான் விலகியதால் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லமுடியாது. தேமுதிகவின் தலைவராக விஜயகாந்த் உள்ளார். அவர் கட்சியை நடத்துவார்.
ஆலந்தூர் மக்கள் என்னைவிட இளைஞரான ஒருவரை
தங்கள் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பர்.
சுமையை ஓரளவுக்குத்தான் தாங்க முடியும். முடியவில்லை என்றால், விலகி பிறகுக்கு வழிவிட வேண்டும்.
அதிமுக உள்பட எந்த இயக்கத்துக்கும் போகப்போவதில்லை. ஓய்வு என்று அறிவித்துவிட்ட பிறகு வேறு எங்கும் செல்ல மாட்டேன்.
அதிமுக எதிர்ப்பு சரியில்லை: அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு இரவுபகலாக பாடுபட்டதில் எனக்கும் பங்கு உண்டு. தேர்தலில் அமோக வெற்றிபெற்று அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சி வரிசையில் தேமுதிக அமர்ந்தது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் அதிமுக கூட்டணியால் வந்தோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கூறி, அதிமுகவை தேமுதிக எதிர்ப்பதால் அது திமுகவுக்கே சாதகமாக அமையும்.
இதை கூறினால் அதை அவர்கள் ஏற்கவே இல்லை. இதுவே தேமுதிகவுக்கும் எனக்கும் ஏற்பட்ட ஆரம்ப பிரச்னை எனக் கொள்ளலாம்.
தேமுதிக மாற்று இல்லை: அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேமுதிக இருக்க வாய்ப்பு இல்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிரான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணா வந்தார். அதன் பிறகு எம்ஜிஆர். வந்தார். அதுபோல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தேமுதிகவால் (விஜயகாந்த்) வரமுடியாது.
ஆரம்பத்தில் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது.
ஆனால் அந்தக் கட்சியின் செயல்பாட்டால் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.
குடும்ப ஆதிக்கம்: குடும்ப அரசியல் எல்லாக் கட்சிகளிலும் இருக்கத்தான் செய்கிறது. எம்ஜிஆர் இருந்தபோது ஜானகியம்மாளை அரசியலுக்குள் கொண்டு வரவே இல்லை.
குடும்பத்தினர் அரசியல் இருந்தாலும், முடிவுகள் எடுக்கும்போதும் குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே தலைமையின் பண்பாகும்.
எம்ஜிஆர் தலைமை: எம்ஜிஆர் தலைமை எங்கே, விஜயகாந்த் தலைமை எங்கே... எம்ஜிஆரே எனக்கு எப்போதும் சிறப்பானவர் என்றார் அவர்.
எதிர்காலத்தில் தேமுதிகவே இருக்காது: அதிருப்தி எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம்
எதிர்காலத்தில் தேமுதிக என்ற கட்சியே இருக்காது என்று, அந்தக் கட்சியின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராஜமாணிக்கம் (படம்) தெரிவித்தார்.
தேமுதிகவில் இருந்து அதன் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகிவிட்டார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறியது: தேமுதிகவின் கூடாரம் இனி காலியாகும். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்னும் வெளியேறுவார்கள்.
தேமுதிகவில் யாருக்கும் மரியாதை இல்லை. அந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவார் என நாங்கள் எதிர்பார்த்ததுதான். கட்சியின் மூத்த தலைவரான அவரது பேச்சைக் கட்சியில் யாரும் மதிப்பதில்லை. அவர் கட்சியில் புறக்கணிக்கப்பட்டார்.
ஐ.நா. சபையில் பேசும் அளவுக்குத் தகுதியுடைய பண்ருட்டி ராமசந்திரன் நல்ல தலைவர். மனம் நொந்து வெளியே வந்திருக்கார் என்றால், இது அவராக எடுத்த முடிவாக இருக்காது. அவர் விரட்டியடிக்கப்பட்டுதான் வெளியே வந்துள்ளார். இனி எப்படி தேமுதிக வளர்ச்சியடையும் என எண்ணிப் பார்க்க வேண்டும். இனி அந்தக் கட்சி வளர்ச்சியடையாது. உழைப்பவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், அந்தக் கட்சியில் உள்ள மூவர் அணிதான் கட்சியைச் சீரழிக்கிறது. அவர்களால்தான் 7 எம்எல்ஏ-க்கள் வெளியேறினர். இப்போது பண்ருட்டி ராமச்சந்திரனும் வெளியேறியுள்ளார். அவர் நல்ல நேரத்தில் நல்ல முடிவை எடுத்துள்ளார் என்றார் சாந்தி ராஜமாணிக்கம்.
.
No comments:
Post a Comment