அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி வரும் டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் எம். ஹைதர் அலி அளித்த பேட்டி:
விற்பனை கமிஷனை உயர்த்துவது, ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அபூர்வ சந்திரா கமிட்டியை நியமித்தது.
இந்தக் கமிட்டி தீவிர ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த 2011 ஜனவரியில் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது. அதில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 6 மாதங்களுக்கு ஒரு முறை கமிஷன் தொகையை மாற்றியமைப்பது, பெட்ரோல் டீசல் ஆவியாதல் அளவை முறைப்படுத்துதல், ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பள விகிதத்தை வழங்க ஆவன செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
எனவே, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் டிசம்பர் 22, 23 தேதிகளில் பெட்ரோல் பங்க்குகளில் மின்விளக்குகளை அணைத்தும், டிசம்பர் 24-ம் தேதியன்று அனைத்து பங்க்குகளையும் மூடுவதற்கு அகில இந்திய பெட்ரோலிய வணிகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்வது என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 4,400 பங்க்குகளும் டிசம்பர் 24-ம் தேதி இயங்காது. டிசம்பர் 22,23 தேதிகளில் அனைத்து பங்க்குகளிலும் மின்விளக்குகள் அணைக்கப்படும் என்றார்.
.
No comments:
Post a Comment