Sunday, December 15, 2013

கேரளா அட்டப்பாடியில் தமிழர்கள் வெளியேற்றப்படும் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்: சீமான் பேட்டி


நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரள மாநிலம் அட்டப்பாடி கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்களை வெளியேறுமாறு கேரள அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழக அரசு, மத்திய அரசு, கேரள அரசு ஆகியவை இந்த பிரச்சினையில் தலையிட்டு விரைவில் சுமுக தீர்வு காண வேண்டும். திருப்பூரில் தொடர் மின்வெட்டு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு தொழில் நிறுவனங்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் கியாஸ் குழாய் பதிப்பதற்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. கெயில் நிறுவனத்தினரை தடுத்து நிறுத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும். விளைநிலங்கள் வழியாக கியாஸ் குழாயை பதிக்க கூடாது என்பதை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். பகை நாடாக உள்ள பாகிஸ்தான் கூட மீனவர்களை சுட்டுக் கொல்வது இல்லை. ஆனால் நட்பு நாடு என்று பெயர் கொண்ட இலங்கை, தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வது, சுட்டுக்கொல்வது போன்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசுக்கு போர்க்கப்பல்களை பரிசாக இந்தியா வழங்குகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை. வருகிற தேர்தலில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு காங்கிரசின் அதிகாரத்தை இழக்கச் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் கட்சிகளையும் நாங்கள் வெல்ல விடமாட்டோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் கொள்கைகளில் பெரிய மாற்றம் இல்லை. தமிழகத்தில் மதவாத, சாதிய கட்சிகள் வெல்ல விடாமல் தடுப்போம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. 2016-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். இவ்வாறு சீமான் கூறினார்.

No comments: