தனித் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் முற்றிலுமாக அழித்தொழித்து விட்டதாக நம்பி வந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, மீண்டும் அந்த இயக்கம் தலைதூக்கி, துளிர்த்து வருவதாக தற்போது கலக்கம் அடைந்துள்ளது.
சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபை கூட்டத்தில் இதனை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்துள்ள இலங்கை அரசு, கோபி (என்ற) கே.பி.செல்வநாயகம்(31) தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிரூட்டும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டியது.
இதுவரை வெளிநாடுகளில் தங்கியிருந்த கோபி, தற்போது இலங்கைக்கு திரும்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை ஒன்றினைக்கவும், வேலையில்லா இளைஞர்களை தேர்வு செய்து புதிய போராளிகளாக்கி, தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த திட்டமிட்டு வருவதாகவும் ராஜபக்சே அரசு அஞ்சுகிறது.
இதனையடுத்து, கோபியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இலங்கை போலீசார், '6 அடி உயரத்துடன் சிவந்த நிறம் கொண்ட இவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளது. தகவல் அளிப்பதற்கான 'ஹாட்லைன்' எண்ணையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி என்பவர் வீட்டில் கடந்த வாரம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த ஒருவர் இருந்ததாகவும், அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது, துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவர் தப்பியோடி விட்டதாகவும் குற்றம் சாட்டி வந்த இலங்கை ராணுவம், இந்த தேடுதல் வேட்டையில் தப்பியோடிய நபர் கோபி தான் என்று நம்புகிறது.
இதனையடுத்துதான், பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விதுஷாயினி ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதேபோல், இலங்கையின் அமைதி மற்றும் மறுசீரமைப்புக்காக யாழ்ப்பாணத்தில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பின் இயக்குனரும் கிருஸ்துவ பாதிரியாருமான ப்ரவீன் மற்றும் 'இன்ஃபார்ம்' மனித உரிமை அமைப்பை சேர்ந்த ருக்கி ஃபெர்ணான்டோ ஆகியோரை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இலங்கை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.
உலக நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கடும் கண்டனத்தையடுத்து இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். கோபியுடன் தொடர்பு வைத்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment