ஒரு கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக நடிகர் விவேக் கூறினார்.
ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவியர் பேரவை நிகழ்ச்சியில் நடிகர் விவேக் 1,000 மரக்கன்றுகளை நட்டுவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
பகுத்தறிவுக் கொள்கையை நகைச்சுவையுடன் கலந்து வழங்கியதால் தான் சினிமாவில் எனக்கு புகழ் கிடைத்தது. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை, விவேகானந்தரின் இளைஞர்கள் மீதான உயரிய சிந்தனை- இவை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தவை.
விளைநிலங்கள், விலைநிலங்களாக மாறி வருவது வருத்தம் அளிக்கிறது. ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதி இருக்க வேண்டும். ஆனால், இப்போது இதன் பரப்பு குறைந்து வருவதால் மழைப்பொழிவு குறைந்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்தபோது மரம் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அறிவுறுத்தினார். அப்போது தொடங்கி, இதுவரை 21.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். 1 கோடி மரக்கன்றுகள் நடுவதே எனது இலக்கு என்றார்.
இந்நிகழ்ச்சியில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், இணைச் செயலர்கள் செ.நல்லசாமி, எஸ்.என்.பாலசுப்பிரமணியன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.சின்னசாமி, என்.சந்திரசேகர், கல்லூரி முதல்வர் (பொ) என்.பி.கலைவாணி, மாணவியர் பேரவை பொறுப்பாளர்கள் எஸ்.சுமதி, செந்தில்குமார், கவிதாலயம் இசைப்பள்ளி நிர்வாகி ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூலிப்படைக்கு எதிரான படம்
பின்னர் நடிகர் விவேக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"நான் தான் பாலா' என்னும் நகைச்சுவை இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன். இது ஏப்ரலில் வெளிவர உள்ளது. இந்திய திரையுலகில் எந்தச் சிரிப்பு நடிகரும் நடிக்காத பாத்திரம் இது. சமுதாயத்தில் கூலிப்படை முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம் இது.
முழுவதும் நகைச்சுவை பாணியில் "பாலக்காட்டு மாதவன்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறேன். இதில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். "வை ராஜா வை' என்னும் படத்தில் நடித்து வருகிறேன். நடிகர் சூர்யாவுடன் "அஞ்சான்' படத்தில் நடிக்க இருக்கிறேன். இப்படத்துக்கான சூட்டிங் ஏப்ரலில் நடைபெறும் என்றார்.
No comments:
Post a Comment