இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த கல்விச் சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் சட்ட விதிகளை மீறினால் விதிக்கப்படும் தண்டனை குறித்து தெரிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தனியார் பள்ளிகள் தேர்வு எதையும் நடத்தக்கூடாது. இந்த விதியை முதல் முறையாக மீறும் பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரமும் தொடர்ந்து நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அங்கீகாரம் திரும்பப் பெற்ற பிறகும் பள்ளிகள் பழையபடி செயல்பட்டால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க தாமதம், ஆசிரியர்களின் தவறு ஆகியன மீது பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த குழந்தையையும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலோ, கல்வியாண்டு தொடங்கி 6 மாதம் வரையிலோ பள்ளியில் சேர்க்கலாம். நீட்டிக்கப்பட்ட கால அளவுக்குப் பிறகு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். வயது சான்றை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை என்பதற்காக பள்ளிகளில் குழந்தை சேர்க்கைக்கு அனுமதி மறுக்கக்கூடாது.
தனியார் பள்ளிகளுக்கு அருகாமை பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு 25 சதவித இடஒதுக்கீட்டை முதல் வகுப்பிலோ, எல்.கே.ஜி.யிலோ, மழலையர் வகுப்பிலோ அளிக்க வேண்டும். இவர்களுக்கான கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு செலுத்தும்.
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற குழந்தைகளுக்கான பள்ளி கட்டணத்தை உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர், ஐ.சி.எஸ்.இ. நிர்வாகம் ஆகியோரிடம் கோரிக்கை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
இந்த அலுவலர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான செலவீனத்தை கணக்கிட்டு திருப்பி அனுப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவினத்தொகை அல்லது கட்டண நிர்ணயக் குழுவால் அந்த பள்ளிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகை, இதில் எது குறைவோ அதை வழங்க வேண்டும்.
செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 2 தவணைகளாக இந்த தொகை அரசிடமிருந்து வழங்கப்படும். இந்த ஒதுக் கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை ஜூலை மாதத்தில் அதிகாரிகளுக்கு பள்ளிகள் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment