ராமநாதபுரம், பிப்.10: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தனிப்பட்ட நபரிடம் திமுக அடிமையாக உள்ளது என்று ராமநாதபுரம் எம்பி ஜேகே.ரித்தீஷ் தெரிவித்தார்.
இந்த மாவட்டத்தில் கட்சியை வளர்க்காமல் தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டார் மாவட்டச் செயலர் சுப.தங்கவேலன் என அவர் புகார் கூறினார்.
திமுக உள்கட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த ராமநாதபுரம் எம்பி ஜேகே ரித்தீஷ் தலைமையில் இன்று போட்டிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய பலரும் ராமநாதபுரம் மாவட்டச் செயலர் சுப.தங்கவேலன் மீது புகார் கூறினர்.
பின்னர் பேசிய ஜேகே.ரித்தீஷ், ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக தனிப்பட்ட நபரிடம் திமுக அடிமையாக உள்ளது. எனது பெயர்கூட இல்லாமல் நோட்டீஸ் அடித்து கூட்டங்கள் நடத்துகின்றனர். அவர்கள் தொண்டர்களின் உழைப்பை வீணாக்குகின்றனர். பதவிக்கு வரும்முன் தொண்டர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு பதவிக்கு வந்தவுடன் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் திமுக தலைமையகத்தில் இருந்து அவரே உறுப்பினர் படிவங்களை வாங்கி, அவரே அதை பூர்த்தி செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வந்துள்ளார். இதனால் கட்சியில் யார் யார் உறுப்பினராக உள்ளோம் என்பதே தெரியாமல் இருந்தது.
அவர் 2 ஆயிரம் உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்களை வாங்கியுள்ளார். நான் 5000 உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்களை வாங்கியுள்ளேன். அதுவே போதவில்லை. இந்த மாவட்டத்தில் கட்சிக்கு போலியாக உறுப்பினர்களை சேர்க்காமல் உண்மையாக தொண்டர்களை சேர்த்து சிறந்த திமுகவை உருவாக்கிக் காட்டுவோம் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment