நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிங்கள இனவாத அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கையாகும். தங்கள் தாயகத்தை மீட்கவும், சுதந்திரமாக தமிழர்கள் வாழவும் விடுதலையைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்த பின்னர் தோன்றியது தான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்.
அது இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளால் உருவாக்கப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தை அழித்து தமிழர்களை அடிமைப்படுத்தவே மத்திய அரசின் ஆதரவுடன் தமிழர்கள் மீது இன அழிப்புப்போரை ராஜபக்சே அரசு தொடுத்தது. தமிழீழத்தின் மூன்றில் ஒரு பகுதி, அதாவது 8,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு இன்று சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்று அந்நாட்டு நாடாளு மன்றத்திலேயே ஆதாரப்பூர்வமாக தமிழர் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளாரே? அங்கு வாழ்ந்த தமிழர்களின் கதியென்ன? 90 ஆயிரம் விதவைகளுடன், வாழ வழியின்றியும், எதிர்காலம் இருண்டும் ஈழத்தமிழினம் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு மேலும் அங்கு தமிழின அழிப்பு தொடர வேண்டும் என்பதுதான் மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு. அதனால்தான் அது இலங்கை அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டும் காணாதது போல் இருக்கிறது. தமிழக அரசின் நிலையும் அது தானா? தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான இந்தத் தடையின் காரணமாகவே இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர்.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், எதிர் காலத்தை தேடிக்கொள்ளவும் எந்த நாட்டிற்கு அகதிகளாகச் சென்றாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கடல் மூலம் பெரும்பாடுபட்டு ராமேஸ்வரம் கரைக்கு வந்த ஈழத்தமிழர் குடும்பம் ஒன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறது.
ஈழத்தமிழச்சியின் கருவில் இருக்கும் குழந்தையைக் கூட பயங்கரவாதியாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் இங்கும் சிறப்பு முகாம்கள் இன்றும் இருக்கின்றன. இந்த அவல நிலை ஒழிய வேண்டுமானால் விடுதலைப் புலிகளின் மீதான தடை அகற்றப்பட வேண்டும்.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழர்களின் பாதுகாப்பு என்பது, அவர்களின் விடுதலைக்காக அளப்பரிய தியாகம் செய்துப் போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்கிற உண்மையை உணர்ந்து, புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுமாறு மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment